தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகுமா? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும் கொரோனா தொற்று பரவலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 30,055 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,94,260ஆக அதிகரித்துள்ளது. 29,45,678 பேர் இதுவரை தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிறு முழு ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை லாக்டவுன் அமலில் உள்ளது.ஞாயிற்றுக்கிழமைகளில் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. தொற்று பரவல் தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கோவை ,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா?
இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை காலை ஆலோசனை நடைபெறுகிறது. புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

இரவு ஊரடங்கு நீட்டிப்பு
இதில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications