ஆசியக் கோப்பை: ”போர் கண்ட சிங்கம்” இலங்கை கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்த ”ஒரு ஆபத்து”
சென்னை: கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட இலங்கை அணி, இன்று ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இலங்கை அணியின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் யார் காரணம், எப்படி இத்தனை தொடர் வெற்றிகள் சாத்தியமானது என்பதை பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் யாரும் எதிர்பார்க்காதவாறு இலங்கை கொடியை உயர்ந்து பார்க்க வைத்துள்ளனர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். "ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா, இப்போ இப்படி ஆகிட்டாரு" என்று மெட்ராஸ் பட வசனம் அச்ச அசலாக இலங்கை அணிக்கு பொருத்திப் பார்க்கலாம்.
சங்கக்காராவின் ஓய்வுக்கு பின், கேப்டனான மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி , முக்கியத் தொடர்களில் தோல்வியை சந்தித்து வந்தது. முன்னணி வீரர்களின் ஓய்வு, உள்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் பிரச்னை, புதிய வீரர்களின் காயம் என இலங்கை கிரிக்கெட்டை சுக்குநூறாக்கியது.

இலங்கை கிரிக்கெட் அணி
இதன் விளைவு, ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கேப்டன், ஒவ்வொரு தொடருக்கும் ஒரு புதிய அணி என்ற நிலை வந்தது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல், இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கண்கலங்கி சமூக வலைதளங்களில் தங்களது துயரை வெளிப்படுத்தினர். இன்னும் சொல்லப்போனால் வாழ்ந்து கெட்ட ஜமீனாக இருந்தது இலங்கை கிரிக்கெட் அணி.

மீண்டு எழுந்த இலங்கை அணி
இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் நேரம் போகவில்லை என்றால் இலங்கை அணியை அழைத்து தொடரை வென்றுவந்தார்கள். ஆனால் எவ்வளவு வேகமாகவே வீழ்ந்தார்களோ, இப்போது அதே எழுச்சியுடன் இலங்கை அணி மீண்டு வருகிறது. உலக கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் பார்த்து அதிரும் இந்திய அணியை அசாத்தியமாக வீழ்த்திய ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்கள். வெற்றிக்காக போராடுங்கள் என்று கோரிக்கை வைத்த ரசிகர்களுக்கு, இன்று இலங்கை அணி வெற்றியையே பரிசாக அளித்துள்ளது.

ஆபத்து
இவை எல்லாவற்றுக்கும் இலங்கை அணி எடுத்த ஒரு ஆபத்தான முடிவு தான் காரணமாக இருக்கிறது. அந்த முடிவு, இலங்கை அணியின் கேப்டனாக ஷனகாவை நியமித்ததுதான். 2009ல் மைதானத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலிற்கு பின் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட எந்த அணியும் தயாராக இல்லை. ஆனால் பலமான பாதுகாப்பு வழங்குவதாக மீண்டும் இலங்கை அணியை அழைத்தது பாகிஸ்தான்.

கேப்டன் ஷனகா
இருந்தும் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தனர். அதனால் தற்காலிக கேப்டனாக தசுன் ஷனகா தலைமையில் ஒரு இளம் படை புறப்பட்டது. அங்கு அனுபவ வீரர்களோடு முழுமையாக இருந்த பாகிஸ்தான் அணியை 3 - 0 என்று வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது.

இலங்கை எழுச்சி
அங்குதான் இலங்கை அணியின் புதிய அத்தியாயம் தொடங்கியது. இதன்பின்னர் அடுத்த சில தொடர்களுக்கு பின், முழு நேர கேப்டனாக ஷனகா நியமிக்கப்படுகிறார். இலங்கை பிரீமியர் லீக் தொடரால், அணிக்கு சில புதிய வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களோடு ஹசரங்கா போன்ற வீரர்களும் எழுச்சி பெற, சிறிது சிறிதாக காயம்பட்ட சிங்கம் தனது எழுச்சியை தொடங்குகிறது.

இலங்கை வீரர்கள்
அண்மையில் இலங்கையில் உச்சக்கட்ட போராட்டம் நடைபெற்றபோது, ஆஸ்திரேலிய அணியின் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அதில் டி20 தொடரை இழந்தாலும், கடைசி ஆட்டத்தில் ஷனாகா வெளிக்காட்டிய உலகத்தரம் வாய்ந்த அந்த இன்னிங்ஸ், இலங்கை கிரிக்கெட்டில் புதிய புயலை உருவாக்கியது. கேப்டனாகவும், வீரராகவும் ஷனகா அணியில் அனைவரையும் உற்சாகப்படுத்த இன்று ஹசரங்கா, ராஜபக்ச, சமீரா, நிசாங்கா என அணியாக ஆதிக்கத்தை தொடங்கியுள்ளது இலங்கை.

விமர்சனங்கள்
எவ்வித அனுபவமும், உதவியும் இல்லாமல் இலங்கை அணியை ஷனகா தனி ஆளாக முன்னேற்றி வருகிறார். அவருக்கான உதவிகள் அனைத்தும் அணியில் உள்ள வீரர்களும், ரசிகர்களும் தான். இன்றைய போட்டியில் இலங்கை அணி, ஆசியக் கோப்பையை கைப்பற்றினால், ஷனகா ரணதுங்காவுக்கு இணையான கேப்டனாக கொண்டாடப்படுவார். எந்த பத்திரிகையால் அதிகமாக விமர்சிக்கப்பட்டதோ, அதே பத்திரிகையால் இன்று பாராட்டு பத்திரம் வாங்கியுள்ளது இலங்கை அணி.

ஆசியக் கோப்பை யாருக்கு?
1996க்கு பின் எப்படி இலங்கை அணி பார்க்கப்பட்டதோ, இப்போது மீண்டும் அந்த நிலையை இலங்கை அணி எட்டியுள்ளது. இனி ஒவ்வொரு ஆட்டத்திலும் இலங்கை அணிக்கு என பிரத்யேக திட்டங்களை எதிரணிகள் தீட்ட வேண்டும், ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் ஆலோசிக்க வேண்டும், உலகக்கோப்பைப் போன்ற போட்டிகளில் இலங்கையை கட்டுப்படுத்த இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இவையனைத்தும் உறுதி செய்யப்பட இன்று நடக்கும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றி மிகமுக்கியம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை அணி வீழ்த்தி, ஆசிய சாம்பியன்களாக பெயரெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications