ஸ்டாலினின் கோபம் தணிந்ததா? முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு பதவி! மீண்டும் கழகத்தில் கை ஓங்குமா?
சென்னை : திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், அவரது கோபம் தணிந்துள்ளதாகத் தெரிகிறது. சுரேஷ் ராஜனுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தனக்கு மிகவும் நெருக்கமாகச் செயல்பட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் கடுமையாக அப்செட் ஆனார் முதல்வர் ஸ்டாலின்.
இதன் காரணமாக, அவரை பதவியில் இருந்து தூக்கி, அவரை முற்றிலும் புறக்கணித்ததோடு, அவர் பல முறை சந்திக்க முயன்றபோது அதனையும் தவிர்த்தார். சமீபத்திய மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலும் அவருக்கு பதவி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் திமுக தணிக்கைக் குழு உறுப்பினர் பதவி சுரேஷ் ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்டாலினின் கோபம் தணிந்துவிட்டதாக உற்சாகமாகிறார்கள் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள்.

இளம் அமைச்சர்
1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்தார் சுரேஷ் ராஜன். அப்போது தான் முதல்முறையாக எம்.எல்.ஏ.வான கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் சுற்றுலாத்துறை அமைச்சரானார். அதற்கு பிறகு, திமுகவில் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பு சுரேஷ் ராஜனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மாவட்டம் இரண்டாகப் பிரிந்தபோது குமரி கிழக்கு மா.செ ஆனார். சுரேஷ் ராஜன் 23 ஆண்டு காலம், கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம், திமுகவில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

ஸ்டாலினுடன் நெருக்கம்
மாவட்ட செயலாளர் ஆவதற்கு முன்பு இளைஞரணியில் பொறுப்பு வகித்தவர் என்பதால் பல ஆண்டுகளாக ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்தார் சுரேஷ் ராஜன். கட்சியைத் தாண்டி ஸ்டாலினின் குடும்ப நண்பராகவும் இருந்தார். 2006 தேர்தலில் திமுக வென்றபோது மீண்டும் அமைச்சரானார் சுரேஷ் ராஜன். கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் சுரேஷ் ராஜன் தோல்வியடைந்ததால், அமைச்சரவையில் இடம்பிடிக்க முடியாமல் போனது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் அமைச்சர் ஆனார்.

உள்ளாட்சி தேர்தல் பஞ்சாயத்து
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாகர்கோவில் மேயர் பதவியை கைப்பற்றும் விவகாரத்தில் தலைமை உத்தரவை மீறி சுரேஷ் ராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார். மேயராக மகேஷ் வெற்றி பெற்ற நிலையில், சுரேஷ் ராஜனின் ஆதரவு கவுன்சிலர்கள் அவருக்கு எதிராகச் செயல்பட்டதாக புகார் எழுந்தது. திமுக வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டு, பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு உதவுவதாக சுரேஷ் ராஜன் குறித்து தலைமைக்கும் புகார் சென்றது.

தூக்கியடித்த ஸ்டாலின்
இதனால், கடும் கோபம் அடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுரேஷ் ராஜனை குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார். அந்த மாவட்ட செயலாளர் பதவி மேயர் மகேஷுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பலமுறை நேரில் சந்திக்க சுரேஷ் ராஜன் முயற்சித்தார். ஆனால், முதல்வர் சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. குமரிக்கு ஸ்டாலின் ஆய்வுக்குச் சென்றபோதும் சுரேஷ் ராஜனுடன் பேசவில்லை.

ஆச்சரியம்
ஸ்டாலினுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்த சுரேஷ் ராஜனே பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டதும், சந்திக்க கூட ஸ்டாலின் மறுத்ததும் குமரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுரேஷ் ராஜனின் மகன் திருமணத்திற்கு சுரேஷ் ராஜன் முதல்வரை அழைத்தும் அவர் பங்கேற்கவில்லை. துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட ஸ்டாலினின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பெரும் சறுக்கல்
சுரேஷ் ராஜன் கட்சிப் பதவி இல்லாமல் அமைதியாக இருந்து வந்ததால், அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதரவாளர்களின் கைகளே ஓங்கியுள்ளன. கன்னியாகுமரி அரசியலில் சுரேஷ் ராஜன் கடுமையாக ஓரங்கட்டப்பட்டார். கட்சி பேனர்கள், நிகழ்ச்சிகளில், சுரேஷ் ராஜன் பெயரையே தேடும் அளவுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. சுரேஷ் ராஜன் பெயர் எங்கே இருக்கிறது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என போஸ்டரை போட்டு கிண்டல் செய்யும் அளவுக்குச் சென்றது அவரது நிலை.

ஓரங்கட்டப்பட்டார்
சமீபத்தில், திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் முடிந்து, திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், குமரி மாவட்டத்தின் திமுக முகமான சுரேஷ் ராஜனுக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என குமரி மாவட்ட திமுகவில் எதிர்பார்ப்பு நிலவியது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் செயலாளராக மனோ தங்கராஜையும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக மகேஷையும் அறிவித்தது திமுக தலைமை. சுரேஷ் ராஜனுக்கு மட்டுமல்லாமல், அவரது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் கிடைக்கவில்லை. இதனால், முதல்வருக்கு சுரேஷ் ராஜன் மீதான கோபம் குறையவில்லை என்பது உறுதியானது.

தணிக்கைக்குழு உறுப்பினர்
இந்நிலையில் தான் நேற்று திமுக தலைமை, பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தணிக்கைக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்தது. அதில், திமுக தணிக்கைக்குழு உறுப்பினராக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பொதுக்குழுவில் நியமிக்கப்பட்ட 4 பேரோடு, மேலும் மூவரும் தணிக்கைக்குழுவில் இடம்பிடித்துள்ளனர். என்.சுரேஷ்ராஜன், ஏனாதி ப.பாலசுப்பிரமணியம், எம்எல்ஏ ஆர்.டி.சேகர் ஆகியோர் தணிக்கைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுரேஷ் ராஜன் உற்சாகம்
திமுக தலைமை சமாதானமாகியே, சுரேஷ் ராஜனுக்கு இந்தப் பதவியைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அண்ணன் கை ஓங்கும் என மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். என்னை கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினராக நியமித்துள்ள கழகத் தலைவர் தளபதியார் ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என சுரேஷ் ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications