பாய்சன்.. பாயாசம்.. இந்தி போராட்டம் புதுசா? உரிமை போராட்டத்தை கிண்டலடிக்கிறாரா விஜய்? என்ன ப்ரோ?
சென்னை: நடிகர் விஜய்.. அரசியல்வாதி விஜயாக தமிழக வெற்றிக் கழக மேடையில் பேசிய சில விஷயங்கள் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் கருத்துக்கள் சில தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக முதலாண்டு ஆண்டு நிகழ்வில் பேசிய விஜய், இந்தி எதிர்ப்பை பற்றி பேசினார். இந்தி என்ற வார்த்தையை பயன்படுத்தாமலே இந்தி திணிப்பை பற்றி பேசினார். பாஜக என்ற வார்த்தையை பயன்படுத்தாமலே அதை பற்றி கருத்து சொன்னார்.

நேரடியாக பேசுவதற்கு விஜய்க்கு என்ன யோசனையோ.. அச்சமோ.. அது அவருக்கே வெளிச்சம். அதெல்லாம் அவரின் நிலைப்பாடு. ஆனால் அதை தாண்டி அவர் சொன்ன கருத்துக்கள் சிலதான் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் பேச்சு
இந்த விழாவில் பேசிய விஜய், மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால், சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர் குழப்பத்தில் உள்ளனர். பணம் பணம் பணம் என பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நம்முடைய முதல் வேலை. அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தான்.
மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் பணம் மட்டுமே குறியாக உள்ள பண்ணையார்களை அகற்ற வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தது ஒரு சிலருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. விரைவில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த போகிறோம்.
அந்த காலத்துல பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பாங்க. இப்ப பதவி இருக்கவங்க எல்லாம் பண்ணையாரா மாறிடுறாங்க. இப்போ புதுசா ஒரு பிரச்னையை கிளப்பி இருக்காங்க.புதிய கல்விக்கொள்கையை கொடுக்கவில்லை என்றால் மாநில நிதியை நிறுத்துவோம் என்கிறார்கள். கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. வாங்க வேண்டியது இவர்கள் கடமை. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை. கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி BRO.
இங்கே எவ்வளவு சீரியஸாக ஒரு பிரச்னை நடந்துகொண்டிருக்கிறது? இவங்க ரெண்டு பேரும், அதாங்க ஃபாசிஸமும் பாயாசமும். நம்ம கொள்கை எதிரியும் அரசியல் எதிரியும் பேசி செட்டிங் செய்துகொண்டு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். தினம் தினம் இதை சொல்லி சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள்.. இதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா? இவர்கள் அடித்துக் கொள்வதுபோல அடித்துக் கொள்வார்களாம்... மக்கள் அதை நம்பணுமாம்! What Bro? Its Very Wrong Bro... இதுக்கு இடையில நம்ம பசங்க.. உள்ளபோய் #TVKforTN என சம்பவம் செய்துவிட்டு வந்துவிட்டார்கள்! யார் சார் நீங்கள்லாம்? எங்க சார் இருக்கீங்க? ஸ்லீப்பர்செல்ஸ் மாதிரி", என்றெல்லாம் விஜய் பேசி இருக்கிறார்.
சர்ச்சையான விஷயம்
1. விஜய் சொல்வது போல இந்தி திணிப்பு விவகாரம் புதிய பிரச்சனை அல்ல.. அது நெடுங்காலமாக.. சுதந்திரத்திற்கு முன்பே இருக்கும் பிரச்சனை. தமிழர்கள் உயிர் விட்ட அளவிற்கு தீவிரமானது.
2. சரி விஜய் புதிய கல்விக்கொள்கையை புதிய விவகாரம் என்று சொல்கிறார் என்று பார்த்தால் அதுவும் 3 வருடங்களுக்கு மேலாக நடக்கும் உரிமை போராட்டம்.
3. இதை எல்லாம் கிண்டல் அடிக்கும் விதமாக What Bro? Its Very Wrong Bro என்ற கிண்டல் தொணியில் பேசுவது.. பாயாசம் என்று கிண்டலாக கூறுவது கடும் விமர்சனங்களுக்கு ஆளாக இருக்கிறது.
4. ஹேஷ்டேக் சண்டையால் பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் அதே விஜய் தனது ரசிகர்கள் செய்யும் ஹேஷ்டேக் சண்டையை "சம்பவம்" என்கிறார். அரசியல் முரண்!
5. இப்போ புதுசா ஒரு பிரச்னையை கிளப்பி இருக்காங்க.புதிய கல்விக்கொள்கையை கொடுக்கவில்லை என்றால் மாநில நிதியை நிறுத்துவோம் என்கிறார்கள். கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. வாங்க வேண்டியது இவர்கள் கடமை என்றெல்லாம் சொல்கிறார் விஜய்.. கொடுக்காத மத்திய அரசை கண்டிக்காமல் இதையும் தமிழ்நாடு மீது திருப்பி விடும் வகையில் விஜயின் பேச்சு அமைந்து உள்ளது.
6. திமுக அரசியல் எதிரியாக இருக்கலாம்.. அதை விஜய் எதிர்ப்பதில் அவருக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அதற்கு இந்தி எதிர்ப்பு போன்ற மாநில உரிமை சார்ந்த பிரச்சனைதான் அவருக்கு கிடைத்ததா? முன்னாள் முதல்வர் எடப்பாடியே இதில் திமுகவை எதிர்க்கவில்லை. ஒரே நிலைப்பாடுதான்.
7. அப்படியே திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால்.. காரணமா இல்லை? தினம் தினம் பல கொள்கைகள், கொலைகள், பெண்கள் பாதுகாப்பு பிரச்சனை, பலாத்காரம் என்று ஆயிரம் விஷயங்கள் நடக்கின்றன. இதை எல்லாம் பேசி இருக்கலாமே விஜய்.. திமுகவை கொள்கை எதிரி இல்லை அரசியல் எதிரி என்கிறார். ஆனால் திமுகவை அரசியல் ரீதியாக எதிர்க்காமல் கொள்கை ரீதியாக எதிர்க்கிறார்.
8. நேற்று ஸ்டேஜில் பட டயலாக் போல காமெடியாக பேசிய விஷயம்.. சட்ட ஒழுங்கு பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. சரி அதை விடுங்கள்.. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தமிழக அரசு கடனில் உச்சத்தில் இருக்கிறது.. அதை பேசவில்லை.. தமிழகத்திற்கு ஆதரவான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி மட்டும் பேசி உள்ளார்.
9. விஜய் பேசுவது எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது.. சினிமாவிற்கு செட்டாகலாம்.. ஆனால் அரசியலுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.. நேற்று 1967 தேர்தலை பற்றி பேசிய விஜய்.. அது அண்ணா வென்ற தேர்தல்.. அது இந்தி எதிர்ப்பால் கிடைத்த வெற்றி என்பதை மறந்துவிட்டார் போல.. விஜய் அரசியலில் வலுவாக நிற்க ஒன்று பேசுகிற டயலாக்கை மாற்ற வேண்டும்.. இல்லை டயலாக் எழுதும் வசனகர்த்தாவை மாற்ற வேண்டும்.. இல்லையென்றால் விஜயை பார்த்ததும் What Bro? Its Very Wrong Bro என்ற கிண்டல் அடிக்கும் காலம் தொலைவில் இல்லை.












Click it and Unblock the Notifications