பாதியில் வந்த கைகளுக்கு பதவி! பாஜகவுக்கு தாவ தயாராகும் திமுக ‘தலை’கள்? அண்ணாமலையின் “ஆப்ரேசன் தாமரை”
சென்னை : அதிமுக அமமுக உள்ளிட்ட வேறு வேறு கட்சிகளில் இருந்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு, மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் திமுகவில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்து வந்த முன்னாள் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு கட்ட போராட்டங்கள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக கடந்த ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
நேற்று தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததுள்ள நிலையில், அதனை தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார். இந்நிலையில் திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

திமுகவினர் அதிருப்தி
திராவிட இயக்கக் கொள்கைகளை மிகவும் பிடிப்பு உடையவரும் திமுகவின் பிரபல பேச்சாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, அக்கட்சியின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர். கருணாநிதி காலம் தொடங்கி ஸ்டாலின் காலம் வரையில் அக்கட்சியின் தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். பலமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவர், டெல்லி அரசியலில் திமுகவின் முக்கிய முகமாக வலம் வருபவர். இந்நிலையில் தான் அவரது மகனான சூர்யா சிவா நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

ஆப்ரேசன் தாமரை
அது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தான் என கூறிய சூர்யா திமுகவில் தனக்கும் தனது தந்தைக்கும் உரிய மரியாதை இல்லை எனவும் அதனால் பாஜகவில் இணைய போவதாக கூறினார். தொடர்ந்து இதுகுறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக குடும்ப கட்சி கிடையாது என்றும் தேசியம் தெய்வீகத்தின் நம்பிக்கை கொண்டவர்கள் வந்தால் பாஜக சார்பில் வரவேற்பு அளிப்போம் எனவும், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த யார் வேண்டுமானாலும் வந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி கதவு திறந்து கிடக்கும். இங்கு நிரந்தர தலைவர்கள் யாரும் கிடையாது. இங்கு குடும்பத் தலைவர்கள் யாரும் கிடையாது யார் கொள்கையை ஏற்றுக் கொண்டு வந்தாலும் பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

பலே திட்டம்
அண்ணாமலையின் இந்தப் பேச்சை மிகவும் கவனிக்கத்தக்கது என அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில், இதுகுறித்து பாஜக திமுக என இரு தரப்பிலும் பேசினோம். அந்த வகையில் கடந்த ஒரு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் , மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் என பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் கட்சிக்கு பல ஆண்டுகளாக உழைத்த முக்கிய மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களை கணக்கெடுத்து பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவில் இணைக்க திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கணக்கெடுக்கும் பணி
கட்சியில் தற்போதிருக்கும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர்களை பாஜகவில் இணைத்தால் திமுகவுக்கு மாவட்ட அளவில் பதிலடி கொடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என பாஜக தலைமை நம்புகிறது. அந்த வகையில் அதிருப்தியில் இருக்கும் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்து உள்ளதாகவும். அவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேச பாஜக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

இணைய ஆயத்தம்
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருக்கும் கோவை கரூர் தென்மாவட்டங்களில் முக்கிய இடம் வகிக்கும் தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி , திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் குறித்த கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பாஜகவில் இணைய ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications