பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிக்க போறேன்! மிரட்டிய தேமுதிக நிர்வாகி! கண்டிக்காத பிரேமலதா
சென்னை: பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிக்கும் சூழ்நிலை வந்துவிடும் என தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா முன்பு பகிரங்கமாக நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தேமுதிக பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது கேப்டன் ரதம் என்ற பிரச்சார வாகனத்திற்கு பூஜை போடப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரேமலதா, எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய நிர்வாகி, "எனக்கு கோபம் கோபமாக வருது, ஜெயிலுக்கு போறது எனக்கு புதுசு இல்லை. நான் பத்திரிகையாளர்களை அடித்துவிட்டு 3 முறை ஜெயிலுக்கு போயிருக்கிறேன்.
இதெல்லாம் சரியில்லை, திருந்துங்க! எனக்கு ரொம்ப டென்சன் ஆகுது! நாளைக்கு வீடு புகுந்து அடிக்கும் சூழ்நிலை வந்துவிடும்" என மிரட்டல் விடுத்து பேசியிருந்தார். அவரை அந்த இடத்தில் பிரேமலதா கண்டிக்காதது பத்திரிகையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது.இதில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவும் என தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 60 சொட்சம் நாட்கள் இருக்கும் நிலையில் ராமதாஸ் பாமகவும் தேமுதிகவும் இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் இருக்கின்றன.
தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து பொங்கலுக்கு அறிவிப்பதாகவும் கடலூர் மாநாட்டில் அறிவிப்பதாகவும் பிப்ரவரி 3ஆம் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்த பிரேமலதா, 3 முறையும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் நிர்வாகிகளுக்கு டென்ஷனை ஏற்றி வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு எந்த தேர்தலிலும் தேமுதிக வெற்றி பெறவில்லை. எனினும் தற்போது 14 தொகுதிகளை கேட்டு அதிமுக, திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அதிமுக, திமுகவோ ஒற்றை இலக்கத்தில்தான் கொடுப்போம் என சொல்கிறார்களாம். இதனால் கூட்டணி குறித்து பிரேமலதா அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த நிலையில் திங்கள்கிழமையான நேற்று தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனுக்களை வாங்க ஆள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. இதை பத்திரிகையாளர்கள் படம் பிடித்து வைரலாக்கினர். அப்போதுதான் "அஷ்டமி என்பதால் விருப்பமனுக்களை வாங்க தேமுதிகவினர் ஆர்வம் காட்டவில்லை" என கட்சித் தலைமை சமாளித்தது.
இந்த நிலையில்தான் நேற்று மாலை சென்னையில் நடந்த பூத் கமிட்டி குழு கூட்டத்தில் பேசிய நிர்வாகி பத்திரிகையாளர்களை மிரட்டினார். இது தேமுதிகவுக்கு புதிதில்லை என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அவர்கள் கூறுகையில் விஜயகாந்த் இருந்த போது பத்திரிகையாளர்கள் "தூ.." என சொன்னார். அது போல் தேமுதிகவை அதிமுகவினர் விமர்சித்த போது "அப்ப எங்க வீட்டுக்கு ஏன் வந்தீங்க" என விஜய பிரபாகரன் அதிமுகவினரை ஒருமையில் பேசியிருந்தார்.
அது போல் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சி அலுவலகத்தில் கேள்வி கேட்ட நிருபர்களை நீ, வா போ என ஒருமையில் பேசியிருந்தார். தற்போது பிரேமலதா முன்னிலையில் பத்திரிகையாளர்களை நிர்வாகி மிரட்டுகிறார், அதற்கு அவரை பிரேமலதா கண்டிக்கவும் இல்லை என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications