அவசரம், அவசரமாக பள்ளிகள் திறப்பதற்கு காரணம் என்ன?.. சந்தேகம் எழுப்பும் விஜயகாந்த்.. பரபர கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 30,000-க்கு மேல் சென்ற நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் அனைத்துப்பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகமும் வரவேற்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

நியோகோவ் வைரஸ்
அதேவேளையில் தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.எனவே பள்ளிகள் திறப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சந்தேகம் எழுந்துள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அனைத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்ட பிறகு பள்ளிகளை ஏன் திறக்ககூடாது என்ற கேள்வி எழக்கூடும் என்பதற்காகவே பிப்ரவரி 1-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது தேர்தலுக்காகவே என எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

மறுபரிசீலனை செய்யணும்
தேர்தல் முடிந்த பின் புதிய வைரஸ் பரவி வருவதாக கூறி தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொது தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்றும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications