ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தேமுதிக தனித்துப் போட்டி.. வேட்பாளரை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதேபோல் அக்கட்சியின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும், அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேமுதிக தனித்துப் போட்டி
இதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிட்ட சந்திர குமார் வெற்றிபெற்றார்.

பிரேமலதா பேட்டி
இருப்பினும் தற்போது சந்திர குமார் திமுகவில் இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. தேமுதிகவின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக நிலைப்பாடு
திருமகன் ஈவெரா மறைந்த சில நாட்களிலேயே இடைத்தேர்தலை உடனடியாக அறிவித்ததில் வருத்தம் தான். இவ்வளவு வேகமாக இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது ஏன் என்று தெரியவில்லை. இந்த இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு வெற்றிவாய்ப்பு அமோகமாக இருக்கிறது. மக்களுக்கான வாக்குறுதிகளை அளித்து வாக்கு கேட்போம். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இபிஎஸ், ஓபிஎஸ், பாஜக
பாஜகவும் தங்களது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிமுக 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு மற்றும் பாஜகவின் அண்ணாமலை ஆகியோர் எங்களை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் இன்றைய சூழலில் தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications