2 மேட்டர்.. திமுக முக்கிய மூவ்.. ஸ்டாலின் தலைமையில் துவங்கிய அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்.. ஏன்?
சென்னை: திமுக அனைத்து அணிகள் மற்றும் குழுக்களின் நிர்வாகிகள் கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் துவங்கியது. 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதிய அணி நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும்? என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். குறிப்பாக முக்கிய 2 விஷயங்களை பற்றி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் இப்போது இருந்தே தயாராகி வருகின்றன. குறிப்பாக தலைவர்கள் அடிக்கடி ஆலோசனைகளை மேற்கொள்ள துவங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக, பாஜக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்பட பல கட்சிகள் பணியை துவங்கி உள்ளன.

கட்சியினர் சுறுசுறுப்பு
முதற்கட்டமாக அந்தந்த கட்சியினர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த வேளையில் நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுவது எப்படி?, மாவட்டம் மற்றும் பூத் வாரியாக கட்சியை பலப்படுத்துவது எப்படி, இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் சமூக வலைதளங்களில் செயல்படுவது எப்படி என்பது பற்றிய பல்வேறு விஷயங்கள் குறித்து கட்சிகளின் தலைவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் கூட்டணி தொடர்பான கருத்து பரிமாற்றங்களும் நடைபெற்று வருகின்றன.

இன்று திமுக ஆலோசனை
இந்நிலையில் தான் இன்று திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தலைமையில் துவங்கியது.

திமுகவில் அணிகள் லிஸ்ட்?
திமுகவை பொறுத்தவரை இளம்வயதினர் முதல் ஒவ்வொரு தொழில் செய்பவர்களை ஈர்க்கும் வகையில் அணிகள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 23 அணிகள் உள்ளன. அதன்படி திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணிகள் உள்ளன. மேலும் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, ஆதிதிராவிடர் நல உரிமை பிரிவு, அமைப்பு சாரா ஓட்டுநர் நல பிரிவு, சொத்து பாதுகாப்பு குழு, தணிக்கை குழு, என ஏராளமான சார்பு அணிகளும் செயல்பட்டு வருகின்றன.

கூட்டம் எதற்கு?
இதில் சில அணிகள் ஆக்டிவ்வாக செயல்படும் நிலையில் சில அணியின் நிர்வாகிகள் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அணிகள் சார்பில் நிர்வாகிகள் நியமனம் செய்து கட்சியை பலப்படுத்தவும் திமுக மேலிடம் அறிவுறுத்தி இருந்தது. இதிலும் சில தடுமாற்றம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று நடக்கும் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்படுவதுடன் மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கும் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது தொடர்பாக முதல்வர் நிர்வாகிகளிடம் கேட்டறிவார் என்றும், தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய 2 விஷயம் என்ன?
இந்த கூட்டத்தில் முக்கியமாக 2 விஷயங்களை பற்றி அறிவுரைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று நாடாளுமன்ற தேர்தல், மற்றொன்று திமுகவின் உறுப்பினர் சேர்க்கையாகும். ஒவ்வொரு அணிகள் சார்பிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு எடுத்த நடவடிக்கை பற்றி கேட்கப்பட உள்ளது. இதில் பின்தங்கிய அணிகளுக்கு அதுதொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications