தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் மீது சந்தேகம்... திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி பரபரப்பு பேட்டி..!
சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சம்பந்தமில்லாத நபர்கள் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் திமுக முறையிட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பொன்முடி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை பார்த்தால் தங்களுக்கு சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளதாகவும், வாக்குப்பதிவு மையங்களுக்குள் கணினி வகுப்பு என்ற பெயரில் யார் யாரோ வருவதாகவும் தெரிவித்தார்.
கணினி நிபுணர்கள் என்ற பெயரில் இப்போது அவர்கள் அங்கு வர வேண்டிய அவசியம் என்னவென்றும், குறிப்பாக ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் மடிக்கணினியுடன் 32 பேர் அங்கு வர வேண்டிய தேவை என்னவென்றும் வினவியுள்ளார்.
இதேபோல் தனது திருக்கோவிலூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்முறை தேர்வு என்ற பெயரில் 140-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை சென்றதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தாம் பேசிய பிறகு அவர்களை அவர் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறினார்.
வாக்குப்பெட்டிகள் உள்ள மையங்களுக்குள் நள்ளிரவில் லாரிகள் வருவது ஏன் என வினவிய பொன்முடி குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தான் இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து தேர்தல் ஆணையத்தை ஆட்டுவிக்கிறதோ என்ற ஐயப்பாடு உள்ளதாக கூறிய பொன்முடி வாக்கு எண்ணும் மையங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications