முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து திமுக தீவிரமாக ஆராய்ந்து வேட்பாளர்களை தயார் செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் களமிறங்குகிறார் தமிழர் தேசம் கட்சியின் தலைவரான கேகே செல்வகுமார் நத்தம் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த முறை நத்தம் விஸ்வநாதனுக்கு கடும் நெருக்கடி அளிப்பார் என சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் திமுகவும் அதற்கு ஈடுகொடுத்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் இருக்கிறது.
இந்த நிலையில் சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் நத்தம் தொகுதியில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழர் தேசம் கட்சித் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தில் தலைவருமான கேகே செந்தில்குமார் களமிறங்குகிறார்.

நத்தத்தில் முத்தரையர் சமூகம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சமூகமாக இருக்கும் நிலையில் அவரை திமுக களமிறக்க இருக்கிறது. நத்தம் தொகுதியில் பெரும்பான்மையாக முத்தரையர் சமூகத்தினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு அடுத்ததாக நாயுடு, நாயக்கர், தலித், முக்குலத்தோர், வெள்ளாளர், வன்னியர் உள்ளிட்ட பல சமூகங்களை சேர்ந்த வாக்காளர்களும் கணிசமான அளவில் உள்ளனர். இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக முத்தரையர் சமூக வாக்குகள் பார்க்கப்படுவதால், அதே சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை களமிறக்குகிறது.
நத்தம் தொகுதி பல ஆண்டுகளாக திமுக - அதிமுக வசம் மாறி மாறி இருந்த தொகுதியாகும். 1977 முதல் 1996 வரை திமுகவின் ஆண்டி அம்பலம் தொடர்ந்து வெற்றி பெற்று இந்த தொகுதியை தனது கோட்டையாக மாற்றியிருந்தார். குறிப்பாக 1996-ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 2001-ஆம் ஆண்டு தேர்தலிலிருந்து நத்தம் தொகுதியில் மாற்றம் ஏற்பட்டது.
அதாவது, அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். 2016-ஆம் ஆண்டு தேர்தலில், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, நத்தம் விஸ்வநாதனை ஆத்தூர் தொகுதிக்கு மாற்றி போட்டியிட வைத்தார். அந்த தேர்தலில், ஆண்டி அம்பலத்தின் மகன் ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நத்தம் தொகுதிக்கு திரும்பிய நத்தம் விஸ்வநாதன், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொகுதி மீண்டும் அதிமுக வசமாக மாறியது. இந்த முறை நத்தம் தொகுதியில் 5-வது முறையாக களம் காணும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து, அதே தொகுதியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த செல்வக்குமார் களம் காண இருப்பது அரசியல் ரீதியாக பரபரப்பான போட்டியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications