அண்ணன் அண்ணாமலை பயப்படத் தேவையில்லை.. உங்களை மாதிரி நாங்க இல்லை! விளாசிய திமுக எம்.பி அப்துல்லா
சென்னை: போக்குவரத்து கழக பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்து போக்குவரத்தில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக சென்னையில், ஆயிரம் பேருந்துகள் இயக்கத்தை, தனியாரிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும், 25 சதவிகித பேருந்து போக்குவரத்தை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

அண்ணாமலை அறிக்கை
இதையடுத்து போக்குவரத்து கழக பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தை பொருளாதார இழப்பிலிருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்து இருக்கும் தமிழக அரசு, பின்னர் படிப்படியாக அனைத்து பேருந்துகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் மனநிலையில் இருக்கிறது.

இலவச பயணத் திட்டத்தின் நிலை?
போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது இத்துறையை முற்றிலும் அழிப்பதற்கு சமம். இதற்கு திமுக தவிர்த்த அனைத்துச் தொழிற்சங்கங்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. மகளிருக்கும், காவலர்களுக்கும், மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசம் என்று அறிவித்த தமிழக அரசு, தனியாருக்கு தாரைவார்த்த பிறகு இவர்களுக்கான இலவசப் பயண திட்டத்தை என்ன செய்யப்போகிறது?

தமிழக அரசு மீது விமர்சனம்
ஒருவேளை இந்த இலவசங்கள் தனியார் பேருந்திலும் தொடருமானால் அதற்கான இழப்பீட்டை, தமிழக அரசு தனியாருக்குத் தருமா? அப்படித் தந்தால் அது தகுமா? தமிழக அரசு தாங்குமா? என்ற கேள்விக்கு விடை என்ன? தொலைநோக்குப்பார்வை இல்லாமல் தடாலடி முடிவுகளை எடுத்துவிட்டுத் தடுமாறும் வழக்கத்தை இன்னும் தமிழக அரசு கைவிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. பதிலடி
இதற்கு பதிலளித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, தமிழ்நாட்டை பாஜக ஆட்சி செய்தால், ஏர் இந்தியாவை டாடா நிறுவனத்திற்கு விற்றது போல், அரசு போக்குவரத்து கழகத்தை அதானிக்கோ அம்பானிக்கோ விற்பார்கள். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பதால், போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு விற்க வாய்ப்பில்லை. எனவே அண்ணன் அண்ணாமலை பயப்படத் தேவையில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications