“ரோஜ்கர் மேளா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம்”.. லிஸ்டை காட்டி திமுகவின் ராஜீவ் காந்தி விமர்சனம்
சென்னை: சமீபத்தில் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பணி ஆணையை வழங்கினர்.
இந்த திட்டத்தின் மூலம் வரும் காலங்களில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வழங்கப்பட்ட 75 ஆயிரம் பணி ஆணைகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வெறும் 450 பணி ஆணைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என திமுகவின் ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார்.

வேலை வாய்ப்பு
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருந்தாலும், வேலை வாய்ப்பின்மை பிரச்னை பாஜகவுக்கும், பிரதமருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்பிரச்னையை தீர்க்க 'ரோஜ்கர் மேளா' எனும் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் அடுத்த சில மாதங்களில் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு இந்த திட்டம் கைகொடுக்கும்.

திட்டம்
இந்நிலையில் நேற்று திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. பிரதமர் மோடி 20 ஆயிரம் பேருக்கும், 50 அமைச்சர்கள் இதர உள்ள இளைஞர்களுக்கும் பணி ஆணையை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணி ஆணை சென்று சேரும். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வது குறித்து பிரதமர் உறுதி பூண்டுள்ளார்.

விமர்சனம்
மேலும், இதற்காக 38 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் புதியதாக இளைஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்." என்று கூறியிருந்தது. சென்னையில் நடைபெற்ற விழாவில் நிர்மலா சீதாராமன் பணி ஆணைகளை வழங்கினார். இந்நிலையில், இந்த திட்டம் குறித்து திமுகவின் ராஜீவ் காந்தி தனது டிவிட்டரில், "தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த துரோகம் செய்துள்ளது" என்று விமர்சித்துள்ளார். மேலும், "நேற்று 'ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு திட்டத்தில் 75,000 பேருக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் வெறும் 450 பேருக்குதான் பணி ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்கு துரோகம்
அதிலும் 200க்கும் மேற்பட்டோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதே உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் சுமார் 16,000 பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார். இந்த தகவல்கள் உண்மையா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு டிவிட்டர் வாயிலாக கேள்வியையும் எழுப்பியுள்ளார். இதனையடுத்து டிவிட்டரில் 'ரோஜ்கர் மேளா' குறித்த விவாதங்கள் மேலெழுந்துள்ளன. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.3% என்கிற அளவில் இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் 6.43% ஆகக் குறைந்துள்ளது.
ஆனால் ஆண்டு வாரியாக கணக்கிட்டால் இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகமாகும். அதாவது கடந்த 2021ம் ஆண்டு வேலையின்மை விகிதம் 5.98 சதவிகிதமாகும். ஆனால் கடந்த 1991ம் ஆண்டு இது 5.60 சதவிகிதமாக இருந்துள்ளது. அப்போதிலிருந்து 2020 வரை இந்த அளவுக்கு வேலையின்மை அதிகரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications