கழுகு கண்களோடு பார்க்கும் பாஜக.. வேற லெவல் திட்டம்.. சமாளிக்க திமுக எடுத்த வியூகம்!
சென்னை: தமிழ்நாட்டில் வெறும் 4 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ள பாஜக, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். திமுகவின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கழுகு கண்களோடு பார்க்கும் பாஜக தலைவர்கள், சரியான வாய்ப்புகள் கிடைத்தால் மக்களிடம் திமுகவை பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
இதை ஆரம்பத்தில் இருந்தே கண்காணித்து வரும் திமுக, அதற்கு தகுந்தாற் போல் வியூகமும் அமைத்து செயல்பட்டு வருகிறது. அதேநேரம் பாஜகவோ தமிழகத்தில் எதிர்க்கட்சியாக தாங்கள் தான் செயல்படுவதாக வெளிப்படையாக கூறி வருகிறது. இதனை அதிமுகவும் வேடிக்கையாக கடந்து சென்று கொண்டிருக்கிறது.
கோயில் நில விவகாரம், கோயில்களுக்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்து சமயம் சார்ந்த விவகாரங்களில் திமுகவை கடுமையாக கேள்விகள் கேட்டும் விமர்சித்தும் வருகிறது பாஜக. இதனால் இந்த விவகாரங்களை மிகவும் கவனமாக கையாளும் திமுக அரசு , தனது பல்லாண்டு கனவு சீர்திருத்தங்களையும் சேர்த்து அமல்படுத்தி வருகிறது.

தமிழில் பூஜை
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப உடனுக்குடன் திமுக அரசு அகற்றி வருகிறது. கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை திட்டத்தையும் உடனே செயல்படுத்தியது திமுக . இதேபோல் அனைத்து சாதியினர் அர்ச்சகர் திட்டம், கோயில்களில் தமிழில் பூஜை என தனது கனவு திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது.

திமுக அதிரடி
அண்மையில் வெள்ளி சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் கோயில்களை திறக்க வேண்டும் என்று பாஜக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. இதற்கு உடனே செவிசாய்த்த திமுக அரசு, கோயில்களை திறக்க உத்தரவிட்டது. இதன் மூலம் பாஜகவின் ஒவ்வொரு விஷயத்திற்கும் சரியான பதிலை உடனே அளித்து வருகிறது திமுக அரசு.

அண்ணாமலை கேள்வி
இதேபோல ஆவின் 100 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைகேள்வி எழுப்பினார். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், டெண்டர்களை ரத்து செய்து, ஸ்வீட்களை ஆவினில் வாங்க உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி
இதேபோல் மின்சாரதுறையில் முறைகேடு நடப்பதாக அண்ணாமலை புகார் கூறினார். இதற்கு ஆதாரத்ததுடன் சொல்லுங்கள் என்று கூறிய மின்சாரத்துறைஅமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதாரம் இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் இருவரும் மாறி மாறி ட்விட்டரில் மோதிக்கொண்டனர்.

எதிர்க்கட்சி பாஜக
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவை வளர்க்க, திமுகவை டார்க்கெட் செய்து செயல்படுகிறார். அதிமுகவைவிட அதிகமாக பாஜக தான் திமுகவை விமர்சித்து வருவதுபோன்ற தோற்றமும் உருவாகி உள்ளது. அண்மையில் கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது, கோயில்கள் திறப்பு, ஆவின் 100 கோடி ரூபாய் டெண்டர் என்று சில இடங்களில் முதல்வர் செவி சாய்த்து அதைச் சரிசெய்து கொடுக்கிறார். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றிவருகிறது. திமுக பேசுவது எல்லாமே எங்களை எதிர்த்துத்தான். பார்க்கும்போது பாஜக - திமுக அரசியல்தான் நடந்துகொண்டிருக்கிறது. காலத்துக்குத் தகுந்ததுபோல நாங்கள் மாற மாட்டோம்" என்றார்.

பாஜகவை சமாளிக்க
திமுகவோ, தனக்கு எதிராக செயல்படும் பாஜகவை எப்படி கையாள்வது என்று உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாஜகவை சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் கடுமையாக விமர்சிக்கிறது. மொத்ததில் திமுக ஆளும் கட்சியாகவும், பாஜக எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

முக்கியத்துவம் இல்லை
ஆனால் அதிமுக உள்கட்சி பிரச்சனையால் திமுகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதேநேரம் ஒருசிலர் விமர்சித்தாலும் பாஜக கூறும் அளவிற்கு வெளியே வருவது இல்லை. ஆனால் பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி என்பதால் அதன் விமர்சனங்களுக்கு ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் தருவதாக ஒரு கருத்தும் அரசியல் விமர்சர்களிடம் உள்ளது. பாஜக இந்த சூழலை சரியாக பயன்படுத்தி கட்சியை வளர்க்க காய்நகர்த்தி வருகிறது. 2024 தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் பாஜக, திமுகவிற்கு கடும் சவாலை தர வேண்டும் என்று நினைத்து வேலை செய்து வருகிறது.இதை சமாளிக்க திமுகவும் தயாராகி வருகிறது












Click it and Unblock the Notifications