தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்.. விஜய் வெளியிட்ட அந்த அறிவிப்பு.. சோகத்தில் திமுக நிர்வாகிகள்!
சென்னை: தவெகவில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரித்து அறிவிக்கப்பட்டு வருவதால் திமுகவினர் விரக்தி அடைந்துள்ளனர். திமுகவில் மறுசீரமைப்பு பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ள சூழலில், மாவட்டச் செயலாளர்கள் பதவியை எதிர்பார்த்துள்ள பலரும் தவெகவின் செயல்பாடுகளால் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தவெகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறை கடைபிடிக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் வருவதால், கட்டமைப்பை பலப்படுத்த ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டு வருகிறார். இதனால் தவெகவில் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் 27 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளையும் தொடங்கிவிட்டனர். வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமனம் தொடங்கி அடுத்தடுத்து தவெக வேகம் காட்டி வருகிறது. இதனால் திமுகவினர் கொஞ்சம் விரக்தி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது திமுகவில் 78 மாவட்டச் செயலாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில் சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் அமைத்த மறுசீரமைப்பு பரிந்துரை குழுவால் வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையை கொண்டு வரவும் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு பரிந்துரை செய்தது.
குறிப்பாக 40 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனால் இளைஞரணியில் இருக்கும் பலரும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஸ்டாலின் லண்டன் சென்று வந்த பின், உடனடியாக இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டாலின் அந்த பணிகளை கிடப்பில் போட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் திமுகவில் சீனியர்கள் இன்னும் 4 முதல் 5 தொகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோலோச்சி வருகின்றனர். அதேபோல் தவெக ஆட்சிக்கு வந்த பின், அமைச்சர்களை எதிர்த்தும் சீனியர் நிர்வாகிகள் அரசியல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். சோசியல் மீடியா பிரச்சாரத்திலும் கூட பின் தங்கி இருக்கிறார்கள். இன்னும் 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக தவெக தீவிரமாக தயாராகி வரும் சூழலில், திமுக அமைதியோ அமைதி மோடில் இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் பதவி வரும் என்று காத்திருப்பவர்களும், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கொஞ்சம் ஒத்தி வைத்திருப்பதாகவே தெரிகிறது. இப்படியான சூழலில் தவெகவில் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் அறிவித்திருப்பது திமுகவினர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
