ஒன்றரை வருஷமா சொல்லிகிட்டே தான் இருக்காங்க.. எப்போது அமைச்சராக போகிறேன்? உதயநிதி சொன்ன பளீச் பதில்!
சென்னை : திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவரை அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் மீண்டும் முளைத்திருக்கின்றன. இது குறித்து அவரது நண்பரும் அமைச்சருமான அன்பின் மகேஷ் பொய்யாமொழியும் மீண்டும் வலியுறுத்தி பேசியிருக்கும் நிலையில்.. உதயநிதியின் பதில் என்ன?
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த தேர்தலில் மக்களை சந்தித்து தமிழக முதல்வராகவும் உள்ளார்.
மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரைப்படத் துறையில் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர் சூர்யாவுடன் ஒரே ஒரு படத்தில் அதுவும் கடைசி காட்சியில் மட்டும் நடித்தார்.
அடுத்த பிறந்த நாளில் அமைச்சர்! நாளைய திமுக தலைவர் 'உதயநிதி ஸ்டாலின்’!ஆரூடம் சொல்லும் அன்பில் மகேஷ்

உதயநிதி ஸ்டாலின்
அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்தது அதனைத் தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தவர் தொடர்ந்து காமெடி படங்களிலும், அடுத்ததாக சில கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்து ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து திமுகவின் இளைஞர் அணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

சாதாரண தொண்டன்
கட்சி சார்பில் நடைபெற்று வந்த போராட்டங்களில் தான் ஒரு சாதாரண தொண்டன் எனக்கூறி கலந்து கொண்ட அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டதை வெளியில் இருந்தவர்கள் விமர்சித்தாலும் கட்சிக்குள் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் சென்னை சேப்பாக்கம் திருவிழா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வெற்றி பெற்ற அவர் அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆனால் எடுத்த எடுப்பிலேயே அமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்கவில்லை. அதை அவரும் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர் உடன்பிறப்புகள். அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் நண்பரும் ரசிகர் மன்ற நிர்வாகியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரண்டாவது தேர்தலில் போட்டியிட்ட போதே அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .அதுவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கல்வித்துறை வழங்கப்பட்டது புருவங்களையும் உயர்த்தியது.

எப்போது அமைச்சர்?
அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராக்கப்படுவார் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. இடையிடையே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என்று யூகங்கள் கிளம்பும் பின் அது அப்படியே அடங்கிப் போய்விடும். பல சீனியர் அமைச்சர்களும் குறிப்பாக சேகர்பாபு துரைமுருகன் உள்ளிட்டோரும், ஜூனியர் அமைச்சர்களும் நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலின் நன்றாக பணி செய்கிறார் எம்எல்ஏ என்று ஒரு தொகுதிக்குள் அவர் அடங்கிவிடக் கூடாது தமிழகம் முழுவதும் அவர் சேவை செய்ய வேண்டும் எனவே அவரை அமைச்சராக வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் தமிழக முதல்வரிடம் இருந்து எந்த ஒரு சமிக்ஞையும் கிடைக்கவில்லை.

இன்று பிறந்தநாள்
இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதயொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள், திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அன்னதானம் ரத்த தானம் என உதயநிதியின் பிறந்தநாள் களைகட்டி வரும் நிலையில் சென்னையில் பேசிய அவரது நண்பரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"உதயநிதி ஸ்டாலினை மீண்டும் அமைச்சராக வேண்டும் இது என் விருப்பம் மட்டும் அல்ல பொதுமக்களின் விருப்பம் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரின் விருப்பம். அடுத்த பிறந்தநாளுக்குள் அவர் அமைச்சராக பதவி ஏற்பாரா என ஆசைப்படுகிறேன் என வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனால் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவுக்குள் மீண்டும் எழுந்திருக்கிறது.

உதயநிதி பதில்
இது குறித்த பதில்களுக்கு முதல்வர் முடிவெடுப்பார் என நேற்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நீங்கள் எப்போது அமைச்சராகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உதயநிதி ஒன்றரை வருடமாக சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.. நான் எப்போது அமைச்சராக இருப்பேன் என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார் எனக் கூறியிருக்கிறார். இதனால் உதயநிதி அமைச்சராவது குறித்த செய்தி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என உடன்பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர்.