1987 டூ 2022.. அதிமுக பிளவின் போது சபாநாயகர்கள் எடுத்த பரபரப்பு முடிவுகள் என்ன? ஓர் அலசல்!
சென்னை: அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்ட போதெல்லாம் சபாநாயகராக இருந்தவர்கள் எடுத்த முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்ததை பார்க்கலாம்.
அதிமுக எனும் அரசியல் கட்சி எம்ஜிஆரால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர். கட்சி தொடங்கிய 5 ஆண்டுகளிலேயே அதாவது 1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மீண்டும் 1984 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து அதிமுக ஜெயலலிதா அணி- ஜானகி அணி என இரண்டாக பிளவுப்பட்டது.
அப்போது ஜானகி அம்மாளுக்கு ஏகோபித்த ஆதரவு இருந்ததால் 1988 ஆம் ஆண்டு முதல்வராக ஜானகி பதவியேற்றுக் கொண்டார். ஆனால் 23 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவியேற்றார் ஜானகி. இந்த நிலையில் அப்போதைய சபாநாயகராக இருந்த பிஎச் பாண்டியன், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 30 எம்எல்ஏக்களை பேரவையிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜெயலலிதா, சபாநாயகர் பி.எச். பாண்டியனிடம் கோரிக்கை விடுத்த போது அதை பி எச் பாண்டியன் நிராகரித்தார்.

வன்முறை
இதனால் பேரவைக்குள் வன்முறை வெடித்தது. பின்னர் 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது அதிமுக ஜெ அணி, ஜா அணி என இரு அணிகளாக பிளவுப்பட்டிருந்ததாலும் இரட்டை இலை சின்னம் முடங்கியதாலும் தனித்தனி சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டனர். அதாவது ஜானகி அணியினர் இரட்டை புறா சின்னத்திலும் ஜெயலலிதா அணியினர் சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

ஜானகி அணி
இந்த தேர்தலில் ஜானகி அணி தோல்வி அடைந்தது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் அதிமுகவை ஜானகி, ஜெயலலிதாவிடமே ஒப்படைத்தார். அப்போது இரட்டை புறாவில் நின்று வெற்றி பெற்ற பி.எச். பாண்டியனை அதிமுக எம்எல்ஏவாக கருத அப்போதைய சபாநாயகர் தமிழ்க் குடிமகன் மறுப்பு தெரிவித்தார். மேலும் தன்னை அதிமுக எம்எல்ஏவாக சொல்லிக் கொள்வதில் பிஎச் பாண்டியனுக்கும் உடன்பாடு இல்லை.

லோக்சபா தேர்தல்
பின்னர் 1999 ஆம் ஆண்டு நடந்த லோக்சபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பிஎச் பாண்டியன் வென்றார். ஜெயலலிதா தலைமை வகித்த அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். இவரது மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தியதால் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது.

சசிகலா தலைமையிலான அணி
சசிகலா தலைமையிலான அணி, ஓபிஎஸ் தலைமையிலான அணி என பிரிந்து கிடந்தது. இதையடுத்து சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சென்றார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தரப்பினர் வென்றனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் பல்வேறு கடிதங்களை சபாநாயகர் தனபாலிடம் அளித்திருந்தார். ஆனால் ஒரு கடிதத்தின் மீதும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கவே இல்லை. இந்த நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் சொந்தம் கொண்டாடினர். இதனால் இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது.

ஆர் கே நகர் இடைத்தேர்தல்
பின்னர் நடைபெற்ற ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் சுயேச்சை சின்னத்தில் நின்று தோல்வி அடைந்தனர். இந்த தேர்தலில் தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காகவும் கட்சியின் நலனிற்காகவும் இணைந்தனர்.

18 பேர் நீக்கம்
அப்போது சசிகலா- தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆகியவற்றை பாஜக கூட்டணியுடன் இணைந்து அதிமுக போட்டியிட்டது. இதில் ஆட்சியை அதிமுக இழந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.

அதிமுக பொதுக் குழு கூட்டம்
ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக்குவதற்கு ஓபிஎஸ் நீதிமன்ற தடை வாங்கியதால் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வன்முறை சம்பவத்தை நிகழ்த்தினார். இதனால் ஓபிஎஸ் உள்பட அவருடன் உள்ள அனைவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பதிலுக்கு ஓபிஎஸ்ஸும் நிர்வாகிகளை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஓபிஎஸ்ஸை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதுடன் பொருளாளர் பதவியை பறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் கொடுத்தார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி யாருக்கு
அத்துடன் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓபிஎஸ்ஸிடம் இருந்து அந்த பதவியை பறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் அளித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணை தலைவராக ஆர் பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டது குறித்து சபாநாயகர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சட்டசபை தொடங்கும் போது முடிவெடுக்கலாம் என தெரிவித்திருந்தார். இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து சபாநாயகர் அப்பாவு எந்த மாதிரியான முடிவை எடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கூடியது, அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications