அந்த ஒரு வார்த்தை.. பரபரப்பை கிளப்பும் சசிகலா.. உண்மையில் அதுதான் திட்டமோ? தகித்து நிற்கும் அதிமுக!
சென்னை: அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையில் மறைமுக மோதல் நடந்து கொண்டு இருக்கும் நிலையில்தான் தற்போது சசிகலா பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சசிகலாவின் பேசியதாக கசிந்து இருக்கும் இந்த ஆடியோவில் முக்கியமான விஷயம் ஒன்றை அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் அரசியல் ஆட்டமே இந்த விஷயத்தை நம்பித்தான் இருக்கும் என்கிறார்கள்!
Recommended Video
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளிய வந்த பின் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துவார், புதிய புயலை அரசியலில் ஏற்படுவதுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்தார்.
அரசியலை விட்டு விலகுவேன் என்று அறிவிக்காமல், ஒதுங்கி இருக்க போகிறேன் என்று கூறினார், அதோடு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக
அதிமுக வெற்றிபெற வழி ஏற்படுத்தும் வகையில், வாக்குகளை பிரிக்காமல் சசிகலா இப்படி விலகி இருக்கிறார் என்று அப்போதே அரசியல் வல்லுநர்கள் கணித்து இருந்தனர். தேர்தல் முடிந்த பின் சசிகலா கண்டிப்பாக அரசியலுக்கு திரும்புவார், அதிமுக தோல்வி அடைந்தால் கண்டிப்பாக கட்சியை கைப்பற்ற நினைப்பார் என்று தகவல்கள் வந்தன. தேர்தல் முடிவிற்கு பின் சசிகலாவின் மூவ் எப்படி இருக்கும் என்றுதான் எதிர்பார்ப்பு இருந்தது.

சந்திப்பு
அதேபோல் தேர்தல் முடிந்ததும் சசிகலா ஒரு சிலரை மறைமுகமாக சந்தித்தார். சிலரிடம் போனில் பேசினார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் எதுவுமே உறுதியான செய்தியாக வெளியாகவில்லை. அதிமுகவில் மாபெரும் அதிகார மோதல் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே நடந்து கொண்டு இருக்கிறது. எதிர்கட்சித் தலைவர் யார் என்பதற்காக இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே நடந்த மோதல்.. தற்போது கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

விரிசல்
ஒரு பக்கம் ஓபிஎஸ் தனி லெட்டர் பேடில் அறிக்கை வெளியிடுகிறார், இன்னொரு பக்கம் இபிஎஸ் இதேபோல் தனி லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். இவர்களின் மோதலால் கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களும் தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஜெயக்குமார் போன்ற முன்னாள் எம்எல்ஏக்கள் கட்சியில் வாய்ஸ் இன்றி அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவில் அடுத்த என்ன நடக்கும், கட்சி முழுமையாக இருக்குமா என்று சந்தேகம் கூட கட்சியில் சிலருக்கு எழுந்துள்ளது.

சசிகலா
இந்த நேரத்தை பயன்படுத்திதான் சசிகலா கட்சிக்குள் மீண்டும் வர நினைக்கிறார் என்று தகவல்கள் வருகின்றன. கட்சியை இவர்கள் காப்பாற்ற மாட்டார்கள்... நான்தான் காப்பாற்ற போகிறேன் என்று சசிகலா நிர்வாகிகள் சிலரிடம் கூறி வருகிறாராம். ஆட்சியில் இருந்ததால் ஒற்றுமையாக இருந்தனர், தற்போது எதிர்க்கட்சி ஆனதும் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சசிகலா வருத்தம் தெரிவித்துள்ளார்.

வருத்தம்
இந்த நிலையில்தான் சசிகலா அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கட்சியை காப்பாற்றிவிடலாம், நான் நிச்சயம் மீண்டும் வருவேன் என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார். இது சசிகலா குரல்தான் என்றாலும், அவர்தான் இதை பேசினார் என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் சசிகலா சொல்லும் ஒரு விஷயம்தான் முக்கியமானது.. சசிகலா இதில், நான் கொரோனா முடிந்தவுடன் வருவேன் என்று கூறியுள்ளார்.

கொரோனா
சசிகலா கொரோனா அலை முடியவேண்டும் என்றுதான் காத்திருக்கிறார் என்று ஏற்கனவே அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டு இருந்தனர். 4 வருடம் காத்திருந்த சசிகலா மேலும் 4 மாதங்கள் காத்திருப்பதில் கவலை அடைய மாட்டார். கண்டிப்பாக கொரோனா அலை முடிந்ததும் அவர் மீண்டும் அரசியலில் ஆட்டத்தை தொடங்குவார் என்று கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலா அந்த ஆடியோவில் கொரோனாவிற்கு பின் வருவேன் என்று கூறியுள்ளார்.

பேசுகிறார்
சசிகலா கடந்த 2-3 வாரங்களாக அதிமுக நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாராம். கிட்டத்தட்ட 20+ எம்எல்ஏக்கள் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. சசிகலா மீது சாப்ட் கார்னர் உள்ள மூத்த எம்எல்ஏக்கள் சிலரும் உள்ளனர். அதோடு சசிகலா - ஓபிஎஸ் இடையிலும் கருத்து வேறுபாடு இல்லை, ஓபிஎஸ் பேட்டி ஒன்றில் சசிகலாவிற்கு ஆதரவாக முன்பே பேசி இருந்தார்.. அப்போதே இவர்களுக்கு இடையில் மனஸ்தாபம் சரியாகிவிட்டது என்கிறார்கள்.

நேரம்
சசிகலா உள்ளே வருவதற்கான சூழ்நிலை இதுதான் என்று அவரிடம் "சிலர்" ஆலோசனை வழங்கி உள்ளனர். லாக்டவுன் மட்டும் இல்லை என்றால் சசிகலா தனது மூவை நிகழ்த்தி இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் சசிகலா தற்போது கொரோனா முடியட்டும் என்று காத்து இருக்கிறார். ஓபிஎஸ் தரப்பில் சில எம்எல்ஏக்கள், இபிஎஸ் தரப்பில் சில எம்எல்ஏக்கள் என்று பலருக்கு சசிகலா பக்கமிருந்து தூது சென்றுள்ளது.

கட்சி
பழசை மறந்து விடலாம், இது அரசியல்.. இதில் பழசை நினைவு வைத்து மோத முடியாது, கட்சிதான் முக்கியம், அதை காப்பாற்ற வேண்டும் என்று சசிகலா தூது விடுவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் சசிகலாவிற்கு சிலர் ஆதரவாக பேசினாலும், முழுமையாக இவர் கட்சியில் சேரும் அளவிற்கு எல்லாம் ஆதரவு இல்லை, கொரோனா அலை ஓய்ந்தாலும் கூட சசிகலா அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் தரப்பிற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications