சுகர் வந்தால் மாமிசத்தின் மீது பழியை போடுவதா?.. பேலியோ தமிழகத்திற்கு கட்டாயம் தேவையா? டாக்டர் பரூக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேலியோ உணவு முறை தமிழகத்திற்கு கட்டாயம் தேவையா என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "பழைய" என்ற தமிழ் சொல்லில் இருந்து மருவி வந்தது பேலியோ எனும் ஆங்கிலச்சொல். பேலியோ என்றால் தொன்மையான என்ற பொருள் படும்
இதில் நவீன கால மனிதர்களின்( ஹோமோ சேபியன்ஸ்) மூதாதையர்களான நியாண்டர் தால் மனிதர்களின் வாழ்க்கை முறையில் நாள்தோறும் வேட்டையாடி பிறகு மாலை நேரங்களில் ஒன்று கூட உணவை உண்டு கழித்து ஆடிக் களைத்து உறங்கிய கூட்டத்தினர் அவர்கள்.

Dr Farook Abdulla explains about Paleo Diet is compulsory for Tamilnadu?

அவர்களுக்கு விவசாயம் தெரியாது . விவசாயம் கடந்த 10000 ஆண்டுகளில் மனிதன் கண்டுபிடித்த ஆடம்பரமான தொழில். என்னது விவசாயம் ஆடம்பரமா? என்று கேட்டால் ஆம் அதுவரை பசியைப் போக்க காடு மேடு ஓடித் தேடி இரையை வேட்டையாட வேண்டியிருந்தது. விவசாயம் என்பது ஒரு இடத்தில் இருந்து வேலி அமைத்து பயிர்களைப் பாதுகாத்து நட்டு வளர்த்து செழிப்பாக்கி இருந்த இடத்திலேயே பசியைப் போக்கியது.

இதன் விளைவாக செழிப்பான மழை தரும் இடங்கள் நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டே நாடோடியாக இருந்த மனித இனம் நதிக்கரைகளில் தங்க ஆரம்பித்தது. இதன் விளைவாக தோன்றியதே நதிக்கரை நாகரீகங்கள் மனிதன் தோன்றிய இத்தனை லட்சம் ஆண்டுகளில் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்த இத்தகையதோர் திடீர் மாற்றம். அவனது உடலில் பல சிக்கல்களை உருவாக்க ஆரம்பித்தன.

தினமும் சராசரியாக பத்து முதல் இருபது கிலோமீட்டர் நடந்தும் ஓடியும் திரிந்த அவனது கால்கள் கிராமங்களுக்குள் தினமும் ஐந்து கிலோமீட்டருக்குள் நடக்குமாறு குறைந்தன. ஆயினும் விவசாயம் செய்வதற்காக கடின உழைப்பை செய்ய வேண்டிய சூழ்நிலையில் அவன் இருந்தான். கால்நடைகளை வளர்த்து அவற்றை மேய்ச்சலுக்கு இட்டப்போவது அவற்றைப் பாதுகாப்பது வணிகம் செய்வது என்பதும் அவனது தொழிலாக இருந்தது.

கூடவே விவசாயம் செய்து பெற்ற பொருட்களை பண்டமாற்றம் செய்து வணிகம் செய்ய பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்தான் . இதனால் அவனது மரபணுக்களுக்குள் இருந்த டயாபடிஸ் / ஒபிசிட்டி / பிசிஓடி / ரத்த கொதிப்பு / இதய நோய் போன்றவற்றை உருவாக்கும் காரணிகள் அமைதியாகவே இருந்தன. விவசாயம் தோன்றிய கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் கூட சில பத்தாண்டுகள் வரை மனிதன் விவசாயம் செய்ய வானத்தை பெரிதும் அல்லது முழுவதும் நம்பியவனாக இருந்தான்.

அந்த ஆண்டு பருவ மழை பொய்த்தால் பஞ்சம் தலை தூக்கும். காரணம் அப்போது தானியங்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. ஆழ்துளை கிணறுகள் கிடையாது. அதனால் மாவுச்சத்து அதிகம் உள்ள வளர்வதற்கு அதிக நீர் கோரும் தானியங்களான அரிசி/ கோதுமை போன்றவை சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட ஆடம்பரமாகவே இருந்து வந்தன. கரும்பும் கூட அதிக நீரைக் கோரும் என்பதால் ஆடம்பரம் தான்.

அரிசியில் செய்த இட்லி கூட அப்போதெல்லாம் பலகாரம். நமக்கு முந்தைய தலைமுறையினரைக் கேட்டால் தெரியும். பெரும்பான்மை தமிழர்களின் வீடுகளில் தீபாவளிக்கு தீபாவளி பலகாரமாக செய்யப்பட்ட உணவு - இட்லி இன்னும் இனிப்பில் செய்த உணவுகள் அப்போதெல்லாம் அரிதினும் அரிது. பண்டிகைக் காலங்களில் மட்டுமே அதிரசங்கள் செய்யப்படும். பொங்கல் செய்யப்படும். குறைவான மழை பொழியும் இடங்களில் விளையும் கேப்பை போன்ற சிறு தானியங்கள் தான் பஞ்ச காலங்களில் உணவாக இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் காடு கழனிகளில் வேலை செய்யச் சென்ற நம் முன்னோர் கேப்பை கூழ் குடித்து விட்டு குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் வெயிலில் நின்று( விட்டமின் டி) கடின உழைப்பை செய்து வந்தனர். பஞ்ச காலங்களில் ஒருவேளை உணவு என்பதே ஆடம்பரமாக இருந்த பொழுதுகளும் உண்டு. நெல்லுச்சோறு என்பது ஆடம்பரமாக இருந்ததை கருத்தம்மா என்ற திரைப்படத்தில் திரு. வைரமுத்து அழகாக இதை ஆவணப்படுத்தியிருப்பார். " கூலு சோளக்கூலு வெங்காயம் சேர.. தை மாசம் நெல்லுச்சோறு" என்பார்
தை மாசம் மட்டுமே அரிசியைப் பார்த்தவர்கள் நம் மூதாதையர்மாவுச்சத்து குறைந்த உணவு வழக்கம் + அடிக்கடி பசி பஞ்சம் என்ற பெயரில் நோன்பு / உண்ணாநிலை + உட்கொள்ளலை மிஞ்சிய உடலுழைப்பு இவையெல்லாம் சேர்ந்து அந்த பிரச்சனைக்குரிய மரபணுக்கூறுகளை அமைதியாகவே வைத்திருந்தன.

நாம் விடுதலை பெற்ற பின் நாம் கண்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களால் பசுமைப் புரட்சி, வெண்மைப்புரட்சி என்று உணவு உற்பத்தியில் செய்த புரட்சிகளால் தானியங்களை சேமித்து வைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் போன்றவற்றால் பஞ்சத்தை வெல்லும் அறிவைப் பெற்றோம். இவ்வாறாக மூங்கிலின் வேகத்தில் வளர்ந்து வந்த மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அனைவருக்கும் பஞ்சமின்றி உணவு சமைத்தோம். அப்போது நமக்குத் தெரியாது மூங்கிலை எரிக்கும் சிறு தீக்குச்சியையும் சேர்த்தே சமைத்தோமென.
இதுவே அக்காலத்தில் மாபெரும் வெற்றி.

ஆயினும் எப்போதோ அரிசி என்று இருந்த நிலை மாறி முவ்வேளையும் அரிசி என்றானது. விவசாயத்தில் அதி உயர் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட மனித உழைப்பின் தேவை குறைந்து இயந்திரங்கள் அந்த வேலைகளை சுமந்து கொண்டன. இப்போது உள்ளே இருந்த அந்த பிரச்சனைக்குரிய மரபணுக்கள் லேசாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. இப்போது வரை கூட எந்த அச்சமும் இன்றி மக்கள் முட்டைகளையும் மாமிசத்தையும் நெய்யும் வெண்ணையையும் தேங்காயையும் நுகர்ந்தே வந்தனர்.

கொழுப்பு நிறைந்த அந்த உணவுகள் மீது யாருக்கும் அப்போது செயற்கையான அச்சம் தோற்றுவிக்கப்படவில்லை. பிறகு 1990 களில்
ஐடி எனும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி தோன்றிட ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டே பணம் ஈட்ட முடியும் என்ற நிலை வந்தது . கூடவே ப்ரேக் ஃபாஸ்ட் எனும் காலை உணவு கட்டாயம் எனும் தவறான கருத்து மக்கள் மனதில் விதைக்கப்பட்டது. மூன்று வேளையும் அரிசி / கோதுமை என்று தானியம் சார்ந்த உணவுகளை சாப்பிட்டு கூடவே அப்போது உள்ளே வந்த குளிர்பானங்களைக் குடித்து அந்த தலைமுறையானது துயில் கொண்டிருந்த கெட்ட மரபணுக்களை சீண்டி வெளியே கொண்டு வந்தது.

இது கூட இன்னும் தொலைக்காட்சி, வீடியோ கேம், மொபைல் போன் என்று சேர்ந்து கொள்ள எட்ட நின்று வேடிக்கை பார்த்த தொற்றா நோய்கள் தோளி ஏறித் தொற்றிக்கொண்டன. மில்லீனியம் கணிணிகளுக்கு ஒய் டூ கே (Y2K) பிரச்சனையைக் கொண்டு வந்ததென்றால்
மனிதர்களுக்கு டைப் டூ டியைக் ( T2D - TYPE 2 DIABETES) கொண்டு வந்தது. ஆம்... காணும் இடமெல்லாம் ஸ்நாக்ஸ் விற்கும் கடைகள், தீனிக்கடைகள் பெருக்கெடுக்க தேனீருடன் வடை கட்டாயமாகிப்போன காலகட்டம் அது. இனிப்பு கலந்த உணவுகள் சடங்குகளில் மட்டுமே கிடைத்து வந்த சூழ்நிலை மாறி எறும்பு நுழையாத சந்து பொந்துகளில் கூட இனிப்புப் பண்டங்கள் நுழைந்தன.

சிறுவர்களிடம் கூட உடற்பருமன் தெரிய ஆரம்பித்தது. ஓடியாடி விளையாடும் பழக்கம் அத்துப்போனது. இப்படியாக பத்தில் மூவருக்கு டயாபடிஸ் பத்தில் ஐவருக்கு உடற்பருமன் என்று பங்குபோட்டு பிரித்துக் கொண்டன. தொற்றா நோய்கள் மேற்சொன்ன விசயங்கள் அனைத்தும் அறிவியல் முன்னேற்றங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. மீண்டும் பஞ்ச காலத்துக்கே திரும்புவது தான் நல்லது என்றும் கூறவில்லை. மாறாக நாளின் முவ்வேளையும் வாரத்தின் ஏழுநாட்களும் மாவுச்சத்து நிரம்பப் பெற்ற தானியம் சார்ந்த உணவு வழக்கமும் எந்தக் கட்டுப்பாடுமின்றி உட்கொள்ளப்படும் சீனி/ சர்க்கரை போன்ற இனிப்பும் உடற்பயிற்சியின்மையும் கூடவே மது புகை போன்ற தீய வழக்கங்களும் நம்மை இட்டுச் செல்லும் பாதை தான்
- நீரிழிவு
- இதய நோய்
- சிறுநீரக நோய்
- கல்லீரல் நோய்
போன்றவை
இவற்றுக்கு நம்மிடம் உள்ள விடைதான் என்ன ? முற்றும் முழுவதுமாக தானியங்களை சார்ந்த உணவு முறையில் அதிக மாவுச்சத்து இருக்கிறது (HIGH CARBOHYDRATES).

மாவுச்சத்தை மிக அதிகமாக உண்ணும் பொழுது நமது கணையம் இன்சுலின் உற்பத்தியில் திணறுகிறது.
கூடவே சுரக்கப்பட்ட இன்சுலினும் சரியாக வேலை செய்ய மறுக்கிறது. நாள்தோறும் 60 முதல் 100 கிராம் புரதம் வேண்டும் என்று படிக்கிறோமே அன்றி அதை ஒருவரும் சரியாக உண்பதில்லை. மாவுச்சத்து அதிகம் உண்ணும் உணவுமுறையால் வந்த தீமைகளை முட்டையாலும் நெய்யாலும் வெண்ணெயாலும் மாமிசத்தாலும் வந்தது என்று தவறான கருத்தைக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்தும் நாம் மாற வேண்டும். கொழுப்பின் மீது பரவிய அவதூறுக் கரையைத் துடைத்தெடுக்க வேண்டும். சராசரியாக தமிழன் ஒருவன் அன்றாடம் 300 கிராம் மாவுச்சத்துக்கு மேல் உண்கிறான்.

அதை 100 கிராமுக்கு குறைத்து அதற்கு ஈடாக புரதச்சத்து மற்றும் கொழுப்பு அடங்கிய உணவுகளை தேவைக்கேற்ப உண்பானாயின் இந்த தொற்றா நோய்களின் கொட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்திட முடியும். சந்தையில் ஒரு விதி உண்டு, எந்தப் பொருள் அதிகமாக நுகரப்படுகிறதோ, அந்தப் பொருள் அதிகமாக விற்கப்படும். அதன் உற்பத்தி பெருக்கப்படும். தற்போது அனைவரும் ஸ்நாக்ஸ் / ஃபாஸ்ட் ஃபுட் / இனிப்பு வகைகள் / குளிர்பானங்கள் போன்றவற்றை வரம்பின்றி உண்டும் பருகியும் வருகிறோம். இதை நாமாகவே நிறுத்தி நமது உணவு முறையை குறை மாவு முறைக்கு மாற்றி உடல் உழைப்பையும் மெருகேற்றினால் அதற்கேற்றாற் போல் சந்தையும் மாற்றம் காணும் அத்தகையதொரு சிந்தனை மாற்றம், செயல் மாற்றம் போன்றவற்றை காலம் நம்மிடம் கோருகிறது. அதை உடனே செய்தால் நிச்சயம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். இவ்வாறு பரூக் அப்துல்லா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+