வள்ளலார் விவகாரம்: சங்கியாக ஆளுநர் ரவி சண்டித்தனம்; திரிபுவாதம்- அபத்தம்: கி.வீரமணி கொந்தளிப்பு
சென்னை: வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடலூர் வள்ளலார் 200-வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ரவி நேற்று பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, 10,000 ஆண்டுகால சனாதன தர்மத்தின் ஒளிரும் உச்சநட்சத்திரமாக இருக்கிறார் வள்ளலார் என குறிப்பிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளலார் சனாதன தர்மத்தை மிக கடுமையாக எதிர்த்தவர்; வைதீக மத கோட்பாடுகளை நிராகரித்து தனி வழிபாட்டு முறையை உருவாக்கியவர். ஆனால் வள்ளலாரை சனாதன வைதீகத்துக்குள் அடைக்க பார்ப்பதா? என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், "சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், "தா்ம ரட்சராகப்" புதிய அவதாரம் மேற்கொண்டு இருக்கிறார் என சாடியிருந்தார். மேலும் தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் "தனிப்பெருங் கருணை" ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையைச் சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை எனவும் விமர்சித்திருந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கி.வீரமணி அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் திட்டமிட்டே, வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு நாளும் சவால் விடுவது போல அபத்தக் கருத்துகளை வெளியிட்டு சனாதனச் சண்டப்பிரசங்கம் செய்கிறார். சங்கியாக, சண்டித்தனம் செய்து வருகிறார்!
வள்ளலாருக்கு இப்போது ஜெயந்தியாம்! எது நுழைகிறது பார்த்தீர்களா?
வடலூர் வள்ளலார் சனாதனத்தின் முழுக் கருத் தாளர் என்ற முழுப் பொய் புரட்டை முன்னால் நிறுத்திப் பேசி வம்பளக்கிறார்!
'மதமான பேய்
பிடியா திருக்கவேண்டும்...'
''நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே''
''வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்க விலை
என்ன பயனோ இவை.''
''கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
கண்முடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக...
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றுங்கொண்டறியர் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்'
வேதநெறி ஆகமத்தின் நெறியபு ராணங்கள்
விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணரஉணர்த் தினையே சித்தமே''
என்று ஆறாம் திருமுறையில் ஒப்புதல் வாக்குமூலம் போல், தனது முந்தைய கருத்துகளுக்கெல்லாம் விடை கொடுத்து விடுதலை கண்ட வித்தகரை சனாதனச் சழக்கராகக் காட்டி, வெள்ளை அணிந்த எம் வள்ளல் பெருமானை காவிச் சாய வேட்டி உடுத்திட்டவராகக் காட்டும் - பச்சை திரிபுவாதம் செய்யும் ஆர்.என். ரவியின் தில்லுமுல்லுப் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
"யானையைத் தடவிப் பார்த்து வர்ணனை கூறிய அய்வர்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நாடு தழுவிய கண்டனம் வெடிக்கட்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications