திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அக்.7ஆம் தேதி வேட்புமனு வழங்கலாம்- துரைமுருகன்
சென்னை: திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அக்டோபர் 7ஆம் தேதி அன்று வேட்புமணு வழங்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதேபோல் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோரும் அன்றைய தினமே வேட்புமனு அளிக்கலாம் எனக் கூறியிருக்கிறார்.

திமுக பொதுக்குழு
''நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய - நகர - நகரிய பேரூர் - பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் 9.10.2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள "செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறும்.''

ரூ,50,000 கட்டணம்
''அதுபோது தி.மு.கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.
மேற்கண்ட பொறுப்புகளுக்காக வேட்புமனுக்கள் 7-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அளித்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.''

முன்மொழிய வேண்டும்
''தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் உட்பட) ஐவர் முன்மொழிய, ஐவர் வழி மொழிய வேண்டும். அனைத்து நடைமுறைகளிலும் கழகத் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

சம்பிரதாய அறிவிப்பு
இதனிடையே துரைமுருகன் வெளியிட்டுள்ள மேற்கண்ட இந்த அறிவிப்பு சம்பிரதாய அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி ஏக மனதாக திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவியிடங்களுக்கு மீண்டும் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications