டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி வங்கி கணக்கு, வங்கி லாக்கர்களை முடக்கியது லஞ்ச ஒழிப்புத்துறை
சென்னை: சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் ஊழல் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கினர்.
Recommended Video
அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகாலம் உள்ளாட்சித் துறை அமைச்சராகவே தொடர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. உள்ளாட்சி துறைகளின் அத்தனை டெண்டர்களையும் தமது பினாமி நிறுவனங்கள் மூலமே எடுத்தார். இதற்காக செய்யப்பட்ட அத்தனை முறைகேடுகளும் இப்போது அம்பலமாகிவிட்டன.
சென்னை மாநகராட்சியின் ரூபாய் 464.02 கோடி ஒப்பந்தங்கள், கோவை மாநகராட்சியின் ரூ346.81 கோடி ஒப்பந்தங்கள்.. இப்படி முறைகேடாக பினாமி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என்பது புகார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசும் வழக்கு தொடர்ந்தனர்.

60 இடங்களில் சோதனை
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது எஸ்.பி.வேலுமணி மீதான புகார்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 7 பேர், 10 நிறுவனங்கள் மீது ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர், நண்பர்கள், பினாமிகள், உறவினர்களுக்கு சொந்தமான 60 இடங்களில் நேற்று முன்தினம் 12 மணிநேரம் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் தங்கியிருந்த வேலுமணியிடமும் பல மணிநேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். கோவை உள்ளிட்ட சில இடங்களில் நேற்று 2-வது நாளாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணியின் பினாமியான சந்திரபிரகாஷின் கே.சி.பி என்ஜினீயர்ஸ் நிறுவனம், மதுக்கரை பாலத்துறையில் உள்ள வி.எஸ்.ஐ.எம்.சான்ட்குவாரி ஆகிய இடங்களில் 2-வது நாளாக சோதனை நடந்தது.

ரெய்டில் சிக்கியது என்ன?
இந்த சோதனைகளில் ரூ13 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லஞ்ச ஒழிப்புத்துறை. மேலும் ஹார்ட் டிஸ்க்குகளையும் கைப்பற்றியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை விவரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டிஜிபி கந்தசாமி தெரிவித்திருந்தார்.

எப்போது கைது?
மேலும் எஸ்.பி.வேலுமணி மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் வழக்கு விசாரணை இருப்பதால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன்பின்னரே கைது நடவடிக்கைகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் எஸ்.பி.வேலுமணியை கைது செய்யாமல் இருப்பதற்கான சில லாபிகளும் தீவிரம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வங்கி கணக்குகள் முடக்கம்
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் அவருக்கு சொந்தமான அத்தனை வங்கி லாக்கர்களையும் முடக்கி வைத்துள்ளது லஞ்ச ஒழிப்புத் துறை. இந்த வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட உள்ளனர்.


Click it and Unblock the Notifications
