“Take Diversion!” தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுது! விஜய்யை விளாசிய எடப்பாடி
சென்னை: தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி மிக குறைவாக இருப்பதாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமலை படத்தில் வருவது போல தமிழ்நாட்டின் முதலீடுகள் எல்லாம் "Take Diversion" ஆகி ஆந்திராவுக்கு செல்வதாக விமர்சித்துள்ளார். மேலும், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்போது நாடு முழுக்க ஜிஎஸ்டி என்ற ஒரே வரி வசூலிக்கப்படுகிறது. மாநிலம் வாரியாக வசூலாகும் ஜிஎஸ்டி குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து சரிந்து வந்தது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வருவாய் 1% சரிந்த நிலையில், செப்டம்பர் மாதம் 5% வரை சரிந்தது.

ஜிஎஸ்டி
இந்த மாதம் ஜிஎஸ்டி வருவாய் 3% உயர்ந்த போதிலும், அது தேசிய சராசரியான 22.9%ஐ விட மிக குறைவாகவே உள்ளது. நமது அண்டை மாநிலங்களான கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% மாநிலங்களிலும் ஜிஎஸ்டி அதிகமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெறும் 3% மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் GST வருவாய் வளர்ச்சி தேசிய சராசரியை விட குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமி, ஒருபுறம் விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது என்றும் மறுபுறம் நமக்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன என்றும் சாடியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன.
ஆந்திராவுக்கு போகும் முதலீடுகள்
திருமலை படத்தில், விஜய் "Take Diversion" என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் "Take Diversion" என்று ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு. தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் ஜிடிபி முன்னேறி, தனிநபர் வருமானம் உயர்ந்தால் தானே, ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும்?
தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு "Purchasing Power" இல்லாமல் போனால் எப்படி ஜிஎஸ்டி வருவாய் உயரும்? இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தை சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது.
கேள்வி புரிந்தால் தானே விடை தெரியும்!
தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க ஜெயலலிதா துவக்கிய Guidance_TN அமைப்பை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு. குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல இந்த கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்! தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன சப்ஜெக்ட் என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று கேள்வித்தாளை பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்கு தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!!
அதேபோல், எந்த துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா முதல்வர் அவர்களே? தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்!" என்று கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
