Power cut: நான் பேசி முடிக்கிற வரைக்கும் கரென்ட போகாம இருக்கோணும்! எடப்பாடி பழனிசாமி கிண்டல்
செங்கல்பட்டு: தவெக ஆட்சியில் எப்போது வேண்டுமானாலும் மின்சாரம் வரும் போகும். நான் பேசி முடிக்கிற வரைக்கும் கரன்ட் போகாம இருக்கணும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
அதிமுகவின் 55 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்குது! சரி மின்கட்டணம்தான் உயர்ந்து போச்சு, மின்சாரத்தையாவது சரியாக தருகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
மின்வெட்டு
கடுமையான மின்வெட்டு! நல்ல வேளை நான் பேசி முடிக்கிற வரைக்கும் மின்சாரம் போகாமல் இருக்கோணும்! நமது மாவட்டச் செயலாளர் உஷாராக இருக்கிறார். அதான் ஜெனரேட்டர் வைத்துள்ளார். இந்த தவெக அரசை நம்ப முடியாது, வேண்டுமென்றே அதிமுக கூட்டத்தை கலைப்பதற்காகவே மின்வெட்டு செய்தாலும் செய்வார்கள் என்பதால் ஜெனரேட்டர் வைத்துள்ளார்.
இறைவனிடம் பிரார்த்தனை
ஆகவே இந்த ஆட்சியில் எப்போது கரென்ட் வரும், போகும்னே தெரியாது. நேற்று முன் தினம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றேன். இந்த ஆட்சியில்தான் மக்களுக்கு நல்லது நடக்க மாட்டேங்கிது. இறைவனிடம் போயாவது மக்களுக்கு நல்லது நடக்க பிரார்த்தனை செய்யலாம் என நினைத்து சென்றேன். அங்கேயும் கரன்ட் போய்விட்டது.
மதுரை மீனாட்சி கோயில்
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் ஒரு காரணத்தை சொன்னார். நேற்று மதுரை மீனாட்சியை தரிசிக்க குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றிருந்தார். அப்போது 2 முறை கரன்ட் கட்டாகியுள்ளது. சட்டசபை நடக்கும் போது மின்சாரத் துறை அமைச்சர் எப்போது பார்த்தாலும் பேட்டி கொடுப்பார். அவரு 7 கட்சிக்கு போய்ட்டு வந்தவரு!
வேடதாங்கல் பறவை போல்
வேடதாங்கல் பறவை போல் தவெகவுக்கு போய் அவர் ஒரு முன்னணி தலைவர் போல் பேசிக் கொண்டிருக்கிறார். சரி பேசிகிட்டு போகட்டும், ஆனால் சரியாக பேசணும்தானே! சட்டசபையில் அவர் பேசுகையில், "திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ 20-க்கு கொள்முதல் செய்தார்கள். அதில் ஊழல் நடந்திருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்" என்றார்.
மின்சார கொள்முதல்
இப்போது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்களா? தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ 37.50 காசுகளுக்கு வாங்கியிருக்கிறார்கள். அடுத்தது ரூ 41.50! 20 ரூபாயை விட ரூ 41.50 காசு அதிகமாகிடுச்சினு இப்போதுதான் அந்த அமைச்சருக்கே தெரிகிறது. இப்போ டெண்டரை ரத்து செய்துள்ளார்கள்.
20 ரூபாய்க்கு மின்சாரம்
எவ்வளவு வேடிக்கையான செய்தி! திமுக ஆட்சியில் 20 ரூபாய்க்கு வாங்கியதையே ஊழல்னு சொன்ன அமைச்சர் நிர்மல் குமார், இப்போது அவர்களது ஆட்சியில் 41.50 காசுக்கு வாங்குவதற்கு பெயர் என்ன? சக்கரம் சுத்திக்கிட்டே இருக்குது, நீங்கள் எப்படி இப்போது கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்களை கைது செய்கிறீர்களோ, அது போல் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் போது இந்த ஊழல்களுக்கு தக்க பதில் சொல்லியே ஆக வேண்டும்.
முளைத்து 3 இலை விட்ட தவெக
தவெக என்ற செடி முளைத்து 3 இலைதான் விட்டிருக்கு, அதற்குள் ஆட்சிக்கு வந்துவிட்டு என்ன ஆட்டம் போடுறாங்க! பொன் விழா கண்ட அதிமுகவை பார்த்து தீர்ந்து போன கட்சி என்கிறார் விஜய். தவெக ஆட்சியில் ஊழல் இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திலும் பொதுமக்களின் வேலைகள் நடப்பதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்வெட்டு
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே மின்வெட்டு இருந்து வருகிறது. இரவு நேரங்களில் நடக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் கிடைப்பதில்லை என்பதால் மக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.





Click it and Unblock the Notifications
