இரட்டை இலை யாருக்கும் இல்லை.. ‘புல்லட்’ வாங்க ரெடியாகும் எடப்பாடி..? ஈபிஎஸ் டீம் ‘பரபர’ ஆலோசனை!
சென்னை : அதிமுகவில் நிலவும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரு தரப்புக்கும் 'இரட்டை இலை' சின்னம் கிடைக்காத சூழல் நிலவுவதால், 'புல்லட்' சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட ஈபிஎஸ் தரப்பு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்குகிறார். திருமகன் ஈவெரா மறைவால் நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது தந்தையே களம் காண்கிறார்.
மறுபுறம் அதிமுகவில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே களமிறங்கத் தயாராகி வருகின்றனர். இதனால், இரட்டை இலை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில், கடந்த 2021ஆம் ஆண்டு போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தது. அதன்படி ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேநேரம், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமாகா, தற்போது அதிமுகவே போட்டியிடும் கூறி ஒதுங்கிக் கொண்டது.

இரட்டை இலை
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம், இரண்டு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையுமே அங்கீகரித்துள்ளது. இருவரும் இணைந்து கையெழுத்து போட்டால்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

சின்னம் முடங்கும்
தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளனர். சுயேட்சை சின்னத்திலாவது போட்டியிட்டு, அதிமுகவில் யாருக்கு பலம் என்பதை நிரூபித்துவிட வேண்டும் என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் உறுதியாக உள்ளனர்.

எடப்பாடி திட்டம்
இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது. அதேநேரம், இரட்டை இலை கிடைக்காவிட்டால் என்ன சின்னம் பெறுவது என்ற ஆலோசனையிலும் எடப்பாடி தரப்பினர் இறங்கியுள்ளனர். அதிமுக ஜானகி அணி, ஜெ. அணி என பிரிந்தபோது ஜெயலலிதா அணி, சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. அந்தவகையில் சேவல் சின்னத்தை பெற ஈபிஎஸ் அணி விரும்புவதாக கூறப்பட்டது. ஆனால், உயிருள்ள பறவை, விலங்குகளை சின்னமாக ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தற்போது நிறுத்தி விட்டதால், சேவல் சின்னம் ஒதுக்கப்படாது.

புல்லட்
இதையடுத்து, புல்லட் சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி, தனக்கு நெருக்கமான ஆதரவாளர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறார். அப்போது, இடைத்தேர்தல் சின்னம் பற்றியும் ஆலோசித்துள்ளனர். அதன்படி, புல்லட் சின்னம் பெறலாம் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் கையில்
தேர்தல் ஆணையத்தில், 'புல்லட்' சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்குவது தேர்தல் ஆணையத்தின் கையில் தான் உள்ளது. அதேசமயம், ஓபிஎஸ் தரப்பு என்ன சின்னம் பெற முயற்சிக்கும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. ஓபிஎஸ், தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என நம்பிக்கையோடு பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications