பொய் றெக்க கட்டி பறக்குமாம்.. ‘உடனிருந்தே கொல்லும் வியாதிகள்’ - ஓபிஎஸ் மீது எடப்பாடி சரமாரி அட்டாக்!
சென்னை : சுயநல விஷமிகளின் கெடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் போராடி வருகிறோம், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று ரத்து செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பு பற்றி அறிக்கை விடுத்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் உற்சாகம்
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்.; நம்மையெல்லாம் வாழவைத்த ஜெயலலிதா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.

உடனிருந்தே கொல்லும் வியாதிகள்
இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், திமுக-விற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
23.6.2022 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும், 11.7.2022 அன்று கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் இன்று (2.9.2022) வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

சட்ட வல்லுநர்கள், நிர்வாகிகள்
இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான கழகத்தின் அடிப்படைத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications