நீங்கதான் பொறுப்பு.. மா.செக்களுக்கு ஈபிஎஸ் போட்ட ஆர்டர்.. மிஸ் ஆக கூடாது - 'முந்தைய நாளே இறங்கணும்!
சென்னை : ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் முந்தைய நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாவட்டத்திற்கு குறைந்தது ஒரு பேருந்து என்கிற கணக்கில் பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். ஒரு உறுப்பினர் கூட மிஸ் ஆகக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுச் செயலாளராக ஈபிஎஸ்
ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை பெற பல்வேறு வழிகளிலும் முயன்று வருகின்றனர். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். அதேசமயம், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்று, இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுக பொதுக்குழு
அதே நேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் திட்டப்படி, ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு, பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டத்தில் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. திறந்தவெளியில் பந்தல் அமைத்து பொதுக்குழு நிகழ்விற்கு சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்படுகின்றன.

டெக்னாலஜி வசதிகளோடு
பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் க்யூஆர் கோடு, ஆர்எஃப்ஐடி வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. நிறுவனங்களில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக பயன்படும் ஆர்எஃப்ஐடி கார்டு மூலம் பொதுக்குழு அரங்கிற்குள் பொதுக்குழு உறுப்பினர்களை தவிர வேறு ஆட்கள் வருவதை தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

மாவட்ட வாரியாக ஸ்பெஷல் பஸ்
வெளியூர்களில் இருந்து பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை வரும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பேருந்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உள்ள மாவட்டங்களில், குறிப்பிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் பொறுப்பைக் கொடுத்து, பொதுக்குழு உறுப்பினர்களை பேருந்துகளில் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.

10ஆம் தேதியே
வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு முந்தைய நாளான 10-ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஈபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் கூட மிஸ் ஆகி விடக்கூடாது என கண்டிப்பாக தெரிவித்துள்ளாராம். அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் பொதுக்குழு நடந்தால்
இதற்கிடையே, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு அரசு தடை விதித்தால் ஆன்லைன் மூலம் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் வாயிலாக பொதுக்குழுவில் பங்கேற்கும் அதிமுகவினருக்கான பயிற்சி முகாம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில் மாவட்ட செயலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். அவர்கள் மூலம் மற்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மாவட்ட வாரியாக பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications