இரும்பு கேட்டில் மின்கசிவு.. கதவை அடைத்தபோது மின்சாரம் பாய்ந்து வயதான தம்பதி சாவு..சென்னையில் சோகம்
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டின் வெளியே உள்ள இரும்பு கேட்டை அடைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 78). இவர் அங்குள்ள கிஷன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
மூர்த்தி வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (76). தடய அறிவியல் துறை ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தனியாக வசித்து வந்த தம்பதி
மூர்த்தி பானுமதி வசித்து வந்த குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தி மூர்த்தியும் பானுமதியும் வசித்து வந்தனர். மற்ற வீடுகள் அவர்களது உறவினர்களுக்கு சொந்தமானது. ஆனால் அந்த வீட்டில் யாரும் வசிக்க வில்லை என்று கூறப்பட்டுகிறது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.

இரும்பு கேட்டில் மின்கசிவு
இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவர் மட்டுமே வசித்து வந்துள்ளனர். வழக்கமாக இரவு தூங்குவதற்கு முன்பு வீட்டின் வெளிப்புற இரும்பு கேட்டை பூட்டிவிட்டு தான் செல்வார்கள். அந்த வகையில் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற இரும்பு கேட்டை பூட்டுவதற்காக பானுமதி வெளியே வந்துள்ளார். அப்போது அந்த இரும்பு கேட் அருகே இருந்த மின்விளக்குக்காக செல்லும் வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் பாய்ந்து..
இதனால் அந்த இரும்புகேட்டில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாத பானுமதி இரும்பு கேட்டை பிடித்துள்ளார். அப்போது பானுமதி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் கத்தி கூச்சலிட்ட அவர் சிறிது நொடியில் அப்படியே இரும்பு கேட்டில் சாய்ந்தபடி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மூர்த்தி மனைவி கோமதியை காப்பாற்ற முயன்று அவரை பிடித்துள்ளார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

போலீசார் விசாரணை
இருவரும் கேட்டில் தொங்கியபடி கிடந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் பார்த்து இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதல்கட்டமாக மினி இணைப்பை துண்டித்துவிட்டனர். தொடர்ந்து இருவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை நேரத்தில் இதுபோன்ற...
தனியாக வசித்து வந்த வயதான தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால், வீடுகளில் மின் இணைப்பு சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா, மின்கசிவு ஏற்படுகிறதா என்பவற்றை சோதித்து பார்த்து கொண்டு கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications