உயர்ஜாதி ஏழைகளின் 10% இடஒதுக்கீடு- திமுக கூட்டணியில் கலகமூட்டும் பாஜக! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!
சென்னை: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணியை சமூக நீதிபேசும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முறித்துக் கொள்வாரா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
முற்படுத்தப்பட்ட அல்லது முன்னேறிய அல்லது உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் ஏழைகள் என பிரிக்கப்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்தது மத்திய பாஜக அரசு. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. திமுகவும் இந்த வழக்கில் இணைந்திருந்தது.

உயர்ஜாதி ஏழைகளின் 10% இடஒதுக்கீடு
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இது இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிரானது என்பது பொதுவான வாதம். அத்துடன் உயர்ஜாதியில்தான் ஏழைகள் உள்ளனரா? இதர சமூகங்களில் ஏழைகள் இல்லையா? என்பதும் மற்றொரு வாதம். இவ்வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கினர். பெரும்பான்மை அடிப்படையில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது.

முதல்வர் ஸ்டாலின் கருத்து
இத்தீர்ப்பு தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

காங். கம்யூனிஸ்டுகள் ஆதரவு
இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அளித்துள்ள பதில்: பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டின் சட்டத்தை உறுதி செய்து வெளிவந்துள்ள உச்சநீதி மன்ற தீர்ப்பு சமூக நீதிக்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்று கூறுகிறார். ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எனும் சமூக அநீதியை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார் (முதல்வர் ஸ்டாலின்). ஆனால், இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், 2005-06ல் , தங்களின் ஆட்சியில் அமைக்கப்பட்ட மேஜர் சின்ஹோ குழுவானது 2010ம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்பைடையில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது என்றும், இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக வரவேற்பதாகவும் காங்கிரஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையாக ஆதரித்ததோடு, கேரளாவில் அதை அமல்படுத்தியும் உள்ளது.

காங். கம்யூ கூட்டணி முறியுமா?
அதே போன்று திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடத்திய மஹாராஷ்டிராவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், மு,க.ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளை கண்டிப்பாரா? கொள்கையே பெரிது, சமூக அநீதியை காங்கிரஸும், கம்யூனிடுகளும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன என்று பொங்கி எழுவாரா ஸ்டாலின் அவர்கள்? இனி ஓட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அவ்விரு கட்சிகளையும் கூட்டணியிலிருந்து உதறித் தள்ளும் தைரியம் உள்ளதா மு க ஸ்டாலின் அவர்களுக்கு?

காங். கூட்டணி அரசுக்காக மன்னிப்பு கேட்பாரா?
மேலும், 2005-06ல் மேஜர் சின்ஹோ குழுவிற்கு அனுமதி வழங்கி அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு அளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்கியதில் அன்றைய தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு முக்கிய பங்காற்றியதற்காக மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின்? மத்தியில் ஆட்சியில் இருந்த போது காற்றில் பறக்க விட்ட சமூக நீதியை இப்போது கட்டிக்காப்பாற்ற முயல்வது போல் நடிக்கிறோம் என்று ஒப்பு கொள்வாரா தி மு க தலைவர் அவர்கள்? மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து காங்கிரசோடு இணைந்து துரோகமிழைத்து விட்டோம் என்று ஏற்றுக்கொள்வாரா சமூக நீதிக்காக பாடுபடுவதாக பறை சாற்றிக்கொள்ளும் தமிழக முதல்வர்? இவ்வாறு திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications