ரிசல்ட்: தட்டி தூக்கிய திமுக.. தவிடுபொடியான அதிமுக! லைட்டா "உள்ளே வந்துட்ட" பாஜக! படுத்தேவிட்ட மநீம

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் "உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி" என்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆசை நிறைவேறி, உதயசூரியன் உதயமாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆகாத நிலையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலைப் போலவே திமுக கூட்டணியை தொடர்ந்தது. ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன.

இந்த நிலையில்தான், இப்போது ரிசல்ட் வந்துள்ளது. இந்த தேர்தலின் வெற்றியாளர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அது திமுக கூட்டணி என்று. 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெல்ல சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஏறக்குறைய வென்று விட்டது என்று கூட கூறலாம். பெரும்பாலான நகராட்சிகள் பேரூராட்சிகள் ஆகியவற்றையும் ஆளும் கட்சியை கைப்பற்றியுள்ளது.

ஆட்சிக்கு எதிரான அலை இல்லை

ஆட்சிக்கு எதிரான அலை இல்லை

இதன் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தராதது, நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்வது தொடர்பாக இன்னும் முடிவு எட்டப்படாதது ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை இல்லை என்பதை இந்த தேர்தல் பட்டவர்த்தனமாக வெளிபடுத்தி இருக்கிறது. மற்ற கட்சித் தலைவர்களைப் போல திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நேரில் சென்று பரப்புரை செய்யாமலேயே இந்த வெற்றி கைக்கு கிடைத்தது என்பது கவனிக்கத்தக்க மற்றொரு அம்சமாக உள்ளது .

கோட்டைகள் தகர்ப்பு

கோட்டைகள் தகர்ப்பு

அதிமுக பலமாக உள்ளதாக கருதப்படும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டலங்கள், பாட்டாளி மக்கள் கட்சி பலமாக உள்ள தர்மபுரி மாவட்டம், பாஜக பலமாக உள்ள நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகியவற்றிலும் இந்த முறை திமுக வெற்றி கொடியை நாட்டி உள்ளது. எனவே எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் இந்த போட்டியின் மேன் ஆப் தி மேட்ச் திமுக என்பதில் மாற்று கருத்து கிடையாது.

சசிகலா இல்லாத வெற்றிடம்

சசிகலா இல்லாத வெற்றிடம்

ஆனால் அதிமுக தனது பலமான கொங்குமண்டலம் மட்டுமல்லாது தெற்கு மண்டலத்திலும் இழப்பை சந்தித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றி அசத்தியுள்ளதை வைத்து பார்க்கும்போது சசிகலா இல்லாத வெற்றிடம் அதிமுகவில் எதிரொலிப்பது தெளிவாக தெரிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தளர்ச்சியில் அதிமுக

தளர்ச்சியில் அதிமுக

தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக கிட்டதட்ட தோல்வியை ஒத்துக் கொள்வது போல பேச ஆரம்பித்து விட்டது. பெரிய அளவுக்கு விளம்பரங்கள் செய்வதிலும் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் செய்வதிலும் அந்த கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. இது சோர்வு மனப்பான்மையில் அந்த கட்சியினர் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. சட்டசபை தேர்தலின்போது கவுரவமான தோல்வியை பெற்றிருந்தாலும் அதன்பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இப்போது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளதை வைத்து பார்க்கும்போது, எங்கே செல்கிறோம் என்பதை அதிமுக தலைமை ஆலோசனை செய்து சரி செய்ய வேண்டிய கட்டத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளை பல நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு திமுக வென்றுள்ளது இதற்கு நல்ல உதாரணம்.

கமல் கட்சி கவலைக்கிடம்

கமல் கட்சி கவலைக்கிடம்

ஏமாற்றம் அளித்த மற்றொரு கட்சி கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி. உண்மையிலேயே செயல்படுகிறதா என்று வினா எழுப்பும் அளவிற்கு அதன் செயல்பாடு இந்த தேர்தலில் இருந்தது. சட்டசபை தேர்தலிலாவது கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு கடும் போட்டியை கொடுத்தார். சென்னை உள்ளிட்ட நகரங்களில் கவுரவமாக வாக்குகளை வாங்கியது. இந்த முறை சுத்த மோசம். புலிகேசி படத்தில் வரும் , படுத்தே விட்டாரய்யா என்ற டயலாக்கிற்கு இணையாக உள்ளது அதன் பர்பாமன்ஸ்.

பாஜக வளர்ச்சி

பாஜக வளர்ச்சி

அந்தவகையில் இந்த தேர்தலில் வெற்றியாளர்கள் அல்லது எமெர்ஜிங் பிளேயர் பட்டியலில் வருவது பாஜக, விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை தான். ஏனென்றால் இவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. இப்போது தான் அவர்கள் பெறவேத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது தான் இதற்கு காரணம். அதிமுகவை விட்டு பாஜக தனியே பிரிந்து வந்த போது அந்தக் கட்சியால் ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாது என்று பலரும் கட்டியம் கட்டி கூறினர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பாஜக கணிசமாக வெற்றி பெற்றுள்ளது . தலைநகர் சென்னை திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அங்கு 134 வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றிருக்கிறார். தான் கோட்ஸே ஆதரவாளர் என்று வெளிப்படையாக பேசி சர்ச்சையை உருவாக்கியவர் இவர். அப்படியிருந்தும் இவருக்கு சென்னையில் வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் பாஜகவின் வளர்ச்சியை அவ்வளவு எளிதாக குறைத்து சொல்லிவிட முடியாது. ஆனால் கடந்த சில மாதங்களாக அதிமுகவை தாண்டி எதிர்க்கட்சி போல செயல்பட்டது பாஜக. இதை பலமுறை எடப்பாடிபழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வியாக எழுப்பியபோது அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறினார். ஆனால் மக்கள் திமுகவுக்கு மாற்றாக பாஜகவை நினைக்கத் தொடங்கிவிட்டார்களா, அதற்கான ஆரம்பம் இதுவா என்ற கேள்விகளை பாஜகவின் முன்னேற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் உள்ளூரில் உள்ள உறுப்பினர்களின் செல்வாக்கும் வாக்களிப்பில் முக்கிய பங்காற்றும் என்பதை மறந்துவிட முடியாது என்பதால் இப்போதே அதிமுக வாக்குகளை பாஜக பெற்றுவிட்டதாக கூறிவிட முடியாது. மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் பாஜக சோபிக்க முடியவில்லை. பலமாக இருந்த நாகர்கோவில் பகுதியையும் திமுகவிடம் இழந்துள்ளது. 1 சதவீதம் கூட ஓட்டு வாங்கவில்லை. எனவே தாமரை மொட்டு விட்டுள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம் அமைதியாக இருந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இப்போதைய தேர்தலிலும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களும் வெற்றி பெற்றிருந்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர். இப்போதும் பல பேரூராட்சிகள், நகராட்சிகளில் கால்தடம் படித்துள்ளனர். நடிகர் விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிக்காமல் பிரச்சாரமும் செய்யாமல் இந்த அளவுக்கு அந்த இயக்கம் வெற்றி பெற்று வருவது விஜய்க்கு கண்டிப்பாக அரசியல் ஆசையை தூண்டும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த தேர்தல் விஜய்க்கு பீஸ்ட்தான் (பெரும் வேட்டை விலங்கு)

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

உள்ளாட்சியில் நம்ம ஆட்சி என்ற முதல்வரின் கோஷம் நிரூபணமாகியிருக்கிறது, அதிமுக சரிவைத் தொடர்ந்து சசிகலா உள்ளே வரவேண்டும் என்ற கோஷங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது, அதிமுகவிடம், இனி வரும் தேர்தல்களில் பாஜக அதிக தொகுதிகளை கேட்டு பேரம் பேச வாய்ப்பு இருக்கிறது, கருப்பு சிவப்பு என்று வண்ணங்களில் வித்தை காட்டாமல் தனக்கென்று ஒரு கொடியுடன் விஜய் விரைவில் அரசியல் களம் வர வாய்ப்பு இருக்கிறது.. இத்தனை விஷயங்களுக்கும் தூபம் போட்டு இருக்கிறது இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+