இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்.. இல்லாவிட்டால் இரண்டு மடங்கு அபராதம்
சென்னை: அவகாசம் பல முறை நீக்கப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் நாளை நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் அமலுக்கு வருகிறது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவித்தது. அதேநேரம் ஹைபிரிட் வழித்தடங்களில் மட்டும் பிப்ரவரி 15ம் தேதி வரை பணமும் பெற்றுக் கொண்டு அனுப்பப்படும் என்று கூறியிருந்தது,
இதன்படி ஹைபிரிட் வழித்தடங்களில் மட்டும் பிப்ரவரி 16ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் ஆகிறது. இதன்படியே நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் வாகனங்களில் இருப்பதுஅவசியம் ஆகும்..

அடையாள (RFID) பார்கோடு
ஃபாஸ்டேக் என்பது ஒரு ஸ்டிக்கர், இது பிப்ரவரி 16ம் தேதி முதல் கண்டிப்பாக, உங்கள் காரின் விண்ட்ஷீல்டில் இருக்க வேண்டும். உங்கள் வாகனத்தின் பதிவு விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) பார்கோடு கொண்டது ஆகும்,

எப்படி பணம் போகிறது
இந்தியாவில் எந்த டோல் பிளாசாவிலும் வாகனம் ஓட்டினாலும், உங்கள் காரில் பார்கோடு உதவியுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கு மூலம் அதற்கான தொகை கழிக்கப்படும். எனவே நீங்கள் காரின் ஜன்னல் கண்ணாடியை கூட கீழே இறக்கத்தேவையில்லை. இரு சக்கர வாகனங்கள் செல்ல, டோல்கேட்களில் இலவசம் என்பதால், ஃபாஸ்டாக் தேவையில்லை.

எப்படி வாங்குவது
பாஸ்ட்டேக் வாங்க டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். கார், வேன் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு டெபாசிட் தொகை ரூ.200. டிராக்டர்கள், எர்த்மூவிங் உள்ளிட்ட கன ரக வாகனங்களுக்கு டெபாசிட் தொகை ரூ.500. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரீசார்ஜ் செய்யலாம். பாஸ்டேக் ரீசார்ஜ் செல்போன் ரீசார்ஜ் போல எளிமையானது, ஆன்லைனில் செய்யலாம். பாஸ்டேக் பெற முன்னணி வங்கிகள் அல்லது டோல்கேட்களை அணுகலாம்.

சுற்றுச்சூழலுக்கு நல்லது
பாஸ்டேக் வழங்கும் வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருக்க அவசியம் இல்லை. பாஸ்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் வேகமாக டோல்கேட்டை கடக்கலாம், மாசுபாடு குறையும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

எது அவசியம்
வங்கியில் பாஸ்டேக் பதிவு செய்ய, உங்கள் வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் அட்டை, முகவரி மற்றும் அடையாளத்திற்கான ஆதார அட்டை ஆகியவை அவசியம். ஏர்டெல் மற்றும் பேடிஎம் பயனர்களுக்கும் இது பொருந்தும்.

ஆன்லைனில் பார்க்கலாம்
உங்கள் FASTag பேலன்சை சரிபார்க்க, உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனம் / வங்கி / மொபைல் வேலட் எதுவோ, அதன் வலைத்தளத்தைப் பார்க்கலாம். இதற்கான லிங்க் மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்யும்போதே உங்களுக்கு தரப்படும்.

எப்படி பணம் எடுப்பார்கள்
பயனாளர்கள் சுங்கச்சாவடியை கடந்ததும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். வாடிக்கையாளரால் பதிவுசெய்யப்பட்ட பாஸ்டேக் வங்கி அல்லது நிறுவனத்தின் வலைத்தளத்திலும் அவ்வப்போது கணக்கு அறிக்கையை நீங்கள் பார்க்க முடியும். எனவே உடனே பாஸ்டேக் வாங்கி உங்கள் வாகனத்தில் ஒட்டுங்கள் . பிப்ரவரி 16ம் தேதி வாகனங்களில் பாஸ்டேக் இல்லாமல் பயணிப்பது கடினம். பாஸ்டேக் இல்லாவிட்டால் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.