பாலக்காடு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விழுந்து பெண் காயம்.. முதலுதவி பெட்டி இல்லையா? நடந்தது என்ன?
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெர்த் பெட்டியில் இருக்கை ஒன்று கீழே விழுந்ததில், பெண் பயணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில், ரயிலில் முதலுதவி சிகிச்சை அளிக்க முதலுதவி பெட்டி கூட இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக தற்போது ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காட்டிற்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

பெண் பயணி காயம்
கோவை வழியாக இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இந்த ரயிலில் சென்னை முகலிவாக்கம், குமாரசாமி தெருவை சேர்ந்தவர் ஜோதி (வயது 50) என்பவர் தனது குடும்பத்துடன் பயணித்துள்ளார். மனைவி சூர்யா (39), மற்றும் 14 வயது மகனுடன் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் நள்ளிரவு 1.30 மணியளவில் மொரப்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது மிடில் பெர்த்தில் தூங்கி கொண்டு இருந்த பயணி ஒருவர் கீழே இறங்கியுள்ளார். இதில் மிடில் பெர்த் எதிர்பாராத விதமாக சங்கிலி கழன்று கீழே விழுந்துள்ளது. இதனால் கீழ் படுக்கையில் படுத்து உறங்கி கொண்டு இருந்த, பயணி சூர்யா தலையில் காயம் பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட வலியால் சூர்யா அலறி துடித்துள்ளார். உடனே சூர்யாவின் கணவர் ஜோதி, ரயிலில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகரை அழைத்து முதலுதவி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார்.
முதலுதவி சிகிச்சை பெட்டி இல்லை
ஆனால், ரயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி எதுவும் இல்லை. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் ரயிலில் ஒரு முதலுதவி செய்யக்கூட வசதி இல்லையா என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ரயில் மொரப்பூர் அருகே வந்ததால், அங்கு இறங்கி மருத்துவமனைக்கு செல்லுமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்படாமல் எப்படி மருத்துவமனை கூறுவோம் என்று கூறிய சூர்யா ரயிலில் இருந்து இறங்க மறுத்துவிட்டார்.
ரயில்வே விளக்கம்
சேலத்திற்கு ரயில் வந்த போது, அங்கு இறங்கிய சூர்யா ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு சூர்யா வீடு திரும்பினார். இதற்கிடையே, ஓடும் ரயிலில் படுக்கை கழன்று விழுந்து பயணிக்கு அடிபட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: - சென்னை சென்டிரலில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் S-5 பெட்டியில் பெண் பயணி பயணம் செய்தார். இந்த ரயில் ஜோலார்பேட்டையை தாண்டி சென்று கொண்டிருந்த போது, மிடில் பெர்த் விழுந்ததில் கீழ் படுக்கையில் பயணம் செய்த பெண் பயணி காயம் அடைந்தார்.
ரயில்வே அதிகாரிகள் ஆய்வு
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மொரப்பூர் ரயில் நிலையத்தில் அந்த பயணி இறங்க மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து, சேலம் ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு, பெண் பயணிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பெர்த் இருக்கை கழன்ற இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்ததில், டெக்னிக்கல் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. பயணிகள் நடுவில் உள்ள படுக்கை வசதியிலான இருக்கையின் சங்கிலியை இணைக்கும் கொக்கியை சரியான முறையில் கையாளாததே இந்த சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications