ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு குட்நியூஸ்! எப்போது?
கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை துவங்கப்படும். இது உதான் திட்டத்தின் கீழ் செயல்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
சென்னை: ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது எப்போது? எப்படி? செயல்படுத்தப்படும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்தார். இதையடுத்து நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய திட்டங்கள் பற்றி விபரங்கள் வெளியாகின. இந்த பட்ஜெட்டை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர். மாறாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

புதிய விமான நிலையங்கள்
இந்த பட்ஜெட்டில் 2023-24ம் ஆண்டுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ. 3,113.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இந்தியாவின் வான்வழி போக்குவரத்தை சீராக மேற்கொள்ள கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், நீர்வழி விமான நிலையங்கள், நவீன தரை இறங்கும் மைதானங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

விமான அமைச்சகம் பதில்
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் 3வது நாள் அமர்வு இன்று துவங்கியது. இதற்கிடையே ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்குவது தொடர்பாக ராமநாதபுரம் எம்பியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ் கனி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தது.

எப்போது விமான சேவை துவக்கம்
அதன்படி ராமநாதபுரத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமான தளத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும். இந்த விமான தளம்‛உதான்' திட்டத்துக்கு தேர்வாகி உள்ளது. விமான நிலையம் தயாரான 2 மாதத்துக்குள் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதான் திட்டம் என்றால் என்ன?
உதான் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். அதாவது உதான் என்றால் சாதாரண மக்களும் பறக்கலாம் என்று அர்த்தமாகும். அதாவது உள்நாட்டில் விமான போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் முனைப்பில் புதிய விமான நிலையங்கள் அமைத்து புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். தற்போது ராமநாதபுரம் கடலோர காவல் படையின் விமான தளம் உதான் திட்டத்துக்கு தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications