சோகத்தில் செம்மலை.. பதவி கொடுக்காத தவெக தலைமை.. அலர்ட் மோடில் காய் நகர்த்தும் தமிழன் பார்த்திபன்!
சேலம்: தாராபுரம் தொகுதிக்கு முதல்வர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது தவெகவில் இணைந்த செம்மலைக்கு எதிர்பார்த்த மரியாதையோ, மாவட்ட பொறுப்போ கிடைக்கவில்லை என்று புலம்ப தொடங்கி இருக்கிறார். அமைச்சர் செங்கோட்டையனை தவிர்த்து வேறு யாருடனும் பேச கூட முடியாததால், சேலத்தில் தனக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
தாராபுரம் தொகுதிக்கு முதல்வர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். செம்மலையை பிரச்சார வாகனத்தில் கூட ஏற்றாமல், சாதாரணமாக தவெக துண்டு அணிவித்து இணைத்ததே விவாதமாகியது. இதனால் செம்மலைக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட தவெகவில் செம்மலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக அமைச்சர் தமிழன் பார்த்திபன் தரப்பு செம்மலையை தங்களுக்கு போட்டியாக கருதுகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் கூட செம்மலையால் தமிழன் பார்த்திபனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
அமைச்சரவையில் செங்கோட்டையனுடன் மட்டுமே செம்மலையால் பேச முடிகிறது. ஏனென்றால் செம்மலையை அழைத்து வந்தது செங்கோட்டையன் தான். தற்போது மாவட்ட அரசியலில் கோலோச்ச புதிய அஸ்திரத்தை செம்மலை எடுத்திருக்கிறார். அதாவது சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் பணிகளை செம்மலை தொடங்கி உள்ளதாக தெரிகிறது.
தவெகவில் அடிப்படை கட்டமைப்பு இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள செம்மலை முடிவு செய்துள்ளார். இதன் மூலமாக அதிமுக பேச்சாளர்கள், ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகள், அதிருப்தியாளர்களை தவெக பக்கம் கொண்டு வரும் முயற்சியில் செம்மலை தீவிரமாக உள்ளார். இதனை அமைச்சர் தமிழன் பார்த்திபனும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
செம்மலை தனக்கு பதவி கேட்டு தவெக தலைமையை விரைவில் நாடும் முடிவில் இருக்கிறார். ஆனால் தமிழன் பார்த்திபன் தரப்பு, செம்மலைக்கு சேலம் மாவட்டத்தில் எந்த பொறுப்பும் கிடைக்கக் கூடாது என்று காய் நகர்த்தி வருகிறது. அவருக்கோ, அவர் அழைத்து வரும் நிர்வாகிகளுக்கோ பதவி கிடைத்தால், மாவட்டத்தில் தனது அதிகாரம் குறையும் என்பதால், தமிழன் பார்த்திபன் அலர்ட் மோடில் இருப்பதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
