“கூட்டணிக்காக நாங்க ஒண்ணும் தவம் கிடக்கல” அண்ணாமலைக்கு அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரிப்ளை
சென்னை: நாங்கள் யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குப் பதில் அளித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியிலிருந்து விலகியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் அதிமுக தோற்றது என்று அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, லோக்சபா தேர்தலில் தனித்தனி அணியாக களம் கண்ட நிலையில் இரு கட்சிகளுமே தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி குறித்த பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு நான் பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அண்ணாமலை எங்களை சொல்லவில்லை. எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக தான்" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
