Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீக்கடை to ஆக்சிடென்டல் சீஃப் மினிஸ்டர்.. திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்! யார் இந்த OPS?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ள ஓபிஎஸ், அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர். டீக்கடை நடத்திய ஓபிஎஸ்ஸை, முதலமைச்சர் என்ற உயரிய பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான அதிகார யுத்தத்தால் தற்போது திமுகவில் இணைந்துள்ளார் ஓபிஎஸ்.

3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் ஆச்சர்யகரமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் பயணம். அதைப் பற்றி பார்க்கலாம்..

From Tea shop to Chief Minister AIADMK Stalwart to DMK Leader OPS Makes Dramatic Move

யார் இந்த ஓபிஎஸ்?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி பிறந்தவர் பேச்சிமுத்து என்கிற பன்னீர்செல்வம். இவரது பெற்றோர் ஓட்டக்காரத்தேவர் - பழனியம்மாள். தங்களின் குலதெய்வமான பேச்சியம்மன் நினைவாக இவருக்கு பேச்சிமுத்து என அவரது பெற்றோர் பெயர் சூட்டினர். பின்னாளில் அதை பன்னீர்செல்வம் என மாற்றிக்கொண்டார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், கவிதா பானு என்ற மகளும், ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

ஓபிஎஸ், உத்தமபாளையம் கல்லூரியில் பி.ஏ படித்தார். ஆரம்பத்தில் தந்தையுடன் சேர்ந்த பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டார். பின்னர், சொந்தமாக பால் பண்ணை ஒன்றையும், தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.

டீக்கடை - அரசியல்

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 1982 ஆம் ஆண்டு கட்சியில் இவருக்கு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணித் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அ.தி.மு.க ஜெயலலிதா, ஜானகி என இரு அணியாகப் பிளவு ஏற்பட்டபோது ஜானகி அணி ஆதரவாகச் செயல்பட்டார் பன்னீர்செல்வம்.

1991 ஆம் ஆண்டு அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து, ஜெயலலிதா தலைமைக்கு வந்த பின்னர், பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநர் ஆனார். அதைத் தொடந்து, 1993 ஆம் பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் ஆனார். 1996 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2000 ஆம் ஆண்டில் தேனி மாவட்டச் செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார் பன்னீர்செல்வம்.

2001ல் முதல் முறையாக

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனபோதே அவருக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதவியும், பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும் கொடுத்தார் ஜெயலலிதா.

From Tea shop to Chief Minister AIADMK Stalwart to DMK Leader OPS Makes Dramatic Move

ஆக்சிடெண்டல் சீஃப் மினிஸ்டர்

பின்னர், திடீர் அதிர்ஷ்டமாக தமிழ்நாட்டின் முதல்வராகும் வாய்ப்பும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தார் ஜெயலலிதா. 2001, செப்.21 முதல் 2002 மார்ச் 1 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார் ஓபிஸ்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஓபிஎஸ். அந்தத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவே, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

மீண்டும் 2வது முறையாக முதல்வர் சீட்

2011 சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓபிஎஸ். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியும், அவை முன்னவர் பொறுப்பும் கொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகச் செயல்பட்டார்.

2014 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைத ண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் தனது முதல்வர் பதவியை மீண்டும் இழக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரானார் ஓபிஎஸ். 2014, செப்.29 முதல் 2015 மே 22 வரை முதல்வராகப் பணியாற்றினார்.

3வது முறையாக முதலமைச்சர்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபிஎஸ்ஸுக்கு, நிதியமைச்சர் பதவியும், அவை முன்னவர் பொறுப்பும், பின்னர் கழகப் பொருளாளர் பதவியையும் அளித்தார் ஜெயலலிதா.

2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த காரணத்தால், 2016, டிசம்பர் 6-ம் தேதி மூன்றாவது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2017, பிப்.15-ம் தேதி வரை அந்தப் பதவியில் இருந்தார்.

ஓபிஎஸ் தர்மயுத்தம்

ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. தர்மயுத்தம் எனும் பெயரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் அதிகார மையங்களாக இருந்த சசிகலா - டிடிவி தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்.

இதனால் சசிகலா தரப்பு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என அதிமுக இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. ஒரு அமைச்சர், ஏழு எம்.எல்.ஏ-க்கள், 10 எம்.பி-க்கள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் தமிழக அரசியலையே அலற வைத்தது.

எடப்பாடி பழனிசாமி உடன்

இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பின்னர் பல்வேறு அரசியல் போராட்டங்களுக்கு நடுவே 2017, ஆகஸ்ட் 21-ல் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றிணைந்தன. அதன் விளைவாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், தமிழக துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டன.

O Panneerselvam AIADMK DMK

அதிமுகவில் இருந்து நீக்கம்

2021 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு காலம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி உடன் பனிப்போர் நிலவி வந்த சூழலில், 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். ஆனார், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான சூழல் கனியவில்லை.

தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த நிலையில், நீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையின் ஆதரவோடு, அதிமுகவை கைப்பற்ற முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்

2026 சட்டசபை தேர்தலையொட்டி, பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்த நிலையில், ஓபிஎஸ் தனித்து விடப்பட்டார். ஓபிஎஸ் என்ன செய்வது எனத் திக்கித் திணறிய சூழலில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தவெகவிலும் பலர் மீண்டும் அதிமுகவுக்கும் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் தான் தற்போது, திமுகவில் இணைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் முக்கிய தலைவராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஓ.பன்னீர்செல்வம், 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+