"இது வெறும் தொடக்கம் தான்.." சட்டென உயரும் தங்கம் விலை! இது காரணம் வேற.. விளக்கும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: ஒரு கிராம் தங்கம் விலை நேற்று மட்டும் ரூ.85 குறைந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பார்க்கும் போது அது பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. இதற்கிடையே வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும். இது குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பதைக் குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் தங்கத்தைத் தான் மக்கள் எப்போதுமே முதல் சேமிப்பாகப் பார்ப்பார்கள். இதன் காரணமாகவே வீட்டில் சேர்த்து வைக்கும் போது முதலில் தங்கத்தைச் சேர்த்து வைப்பார்கள்.

ஏனென்றால் ஆபத்தான காலங்களில் தங்கத்தைப் போல எதுவுமே உதவாது. கொரோனா காலத்தில் கூட ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த தங்கம் தான் பெரியளவில் உதவியது.
தங்கம்: கடந்த 10 நாட்களில் தங்கம் விலை பெரியளவில் அதிகரிக்கவில்லை. ஜூன் 13இல் ஒரு கிராம் தங்கம் ரூ. 6,660ஆக இருந்த நிலையில், நேற்று அது ரூ.6,695ஆக உள்ளது. தங்கம் விலை பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருக்கிறது. தங்கம் விலை வரும் காலத்திலும் இப்படி இருக்குமா.. இப்போது தங்கத்தை வாங்கலாமா என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "சர்வதேச அளவில் பார்க்கும் போது அமெரிக்க டாலருக்கு எதிராக ஜப்பானின் யென், சீனாவின் யுவான் ஆகியவை சரிந்துள்ளன. இந்த இரண்டும் விழுந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.
இப்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூ 83.66ஆக இருக்கிறது. இது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சி.. ஆனால், இது தொடக்கம் மட்டுமே.. வரும் காலங்களில் ரூபாய் மதிப்பு மேலும் சரிவடையும். ஐந்து ஆண்டுகளில் இது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.100 வரை செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
என்ன காரணம்: பங்குச்சந்தைகளில் வெளிநாட்டினர் தங்கள் பங்குகளை விற்பதே இதற்கு முக்கிய காரணம். ஏற்கனவே சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்று வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் இந்திய ரூபாய் கடும் அழுத்தத்தில் இருக்கிறது.
தற்போது இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும் போது டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.85- 86 ஆக இருக்கும். ரிசர்வ் வங்கி தலையிட்டால் ரூபாய் மதிப்பு மெதுவாகக் குறையும். அவர்கள் தலையிடவில்லை என்றால் வேகமாகக் குறையும்.
மதிப்பு என்னவாகும்: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்திய ரூபாய் மதிப்பு சரியும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும். ஏற்கனவே, தங்கம் விலை உயரத் தொடங்கிவிட்டது. ரூபாய் மதிப்பு சரியச் சரியத் தங்கம் விலை தொடர்ந்து உயரும். அமெரிக்க டாலர் மதிப்பு சரிவதும், இந்திய ரூபாய் மதிப்பு உயர்வதும் சேர்த்துத் தான் தங்கம் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது வரும் காலத்திலும் தொடரவே செய்யும்" என்றார்.
எப்போதும் இந்திய ரூபாய் மதிப்பு தங்கம் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கிய காரணமாகும். நமது நாட்டில் கிட்டதட்ட 90% மேலான தங்கம் வெளிநாடுகளில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் இது போன்ற காலங்களில் தங்கத்தை இறக்குமதி செய்ய ஆர்வம் ஆகும். அதேநேரம் ரூபாய் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை அதிகரிக்கும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications