தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர்
சென்னை: தங்கம் விலை அதிரடியாக குறைந்து வரும் நிலையில் மேலும் 30 சதவீதம் அளவிற்கு தங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். பொதுவாக போர் சூழல் வரும் போது தங்கம் விலை உயரவே செய்யும்.. அப்படித்தான் ஈரான் போர் வருவதற்கு முன்பே தங்கம் விலை உச்சம் பெற்றது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் 30 சதவீதம் வரை தங்கம் விலை சரியும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
உலகளாவிய போர் சூழல் காரணமாக தற்போது கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது கச்சா எண்ணெய்க்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. எனவே பலரும் தங்கத்தில் முதலீட்டை குறைத்து, அந்த முதலீட்டை அப்படியே எடுத்து சென்று கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்வதே விலை சரிவுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில்,கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து வருகிறது.எவ்வளவு தேவையோ, அதனைவிட குறைவாகவே உற்பத்தியாகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை ஏறும் என்ற காரணத்தினால், கச்சா எண்ணெயில் மக்கள் பெருமளவு முதலீடு செய்து வருகிறார்கள்.
30 சதவீதம் சரியும்
அதுமட்டுமல்லாமல் புதிய முதலீடுகளை தங்கத்திற்கு பதில் கச்சா எண்ணெய்யில் மாற்றுகிறார்கள். மேலும் ஏற்கனவே தங்கத்தில் செய்த முதலீடுகளை திரும்ப பெற்று கச்சா எண்ணெய் முதலீடு செய்கிறார்கள். இதனால் ஈரான் போர் முடிவதற்குள் தங்கம் விலை ஒரு 30 சதவீதம் அளவிற்கு தங்கத்தின் விலை சரியக்கூடிய வாய்ப்பு உருவாகும். ஆனால் அது ஓரிரு நாட்கள் மட்டுமே நீடிக்கும். மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து அப்படியே நீடிக்கும்" என்றார்.
பொருளாதார நிபுணர்கள் விளக்கம்
அதேநேரம் பொருளாதார நிபுணர்களோ, அந்த அளவிற்கு சரிய வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.. அவர்கள் கூறிய தகவல்களை பார்ப்போம். கச்சா எண்ணெய் விலை உயர்வதால் அமெரிக்காவில் பணவீக்கம் பொதுவாக அதிகரிக்கும். இதைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காது. மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தவே வாய்ப்பு உள்ளது. வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து டாலர் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வார்கள் என்பது விதி.. எனவே தங்கத்தின் விலையைக் குறைக்க வழிவகுக்கும். அந்த அச்சத்தால் தங்கம் விலை சரிகிறது
தங்கத்தை விற்கிறார்கள்
அது மட்டுமல்ல கடந்த சில மாதங்களாகத் தங்கம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டதால், பலர் இப்போது லாபத்தைப் பெறத் தங்கத்தை விற்று வருகிறார்கள். மேலும் பங்குச்சந்தையில் நஷ்டம் அடைபவர்கள், அந்தப் பணத்தைச் செலுத்தத் தங்களது தங்கத்தை விற்பது வழக்கமான ஒன்று தான். அதுவும் சரிவுக்கு காரணமாக உள்ளது.
30% சரிய வாய்ப்புள்ளதா?
வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்: தங்கம் என்பது ஒரு 'பாதுகாப்பான முதலீடு' தான் எப்போதும்... போர் தீவிரமடைந்தால், மக்கள் மீண்டும் தங்கம் வாங்கவே முற்படுவார்கள். எனவே, 5% முதல் 10% வரை குறுகிய காலச் சரிவு ஏற்படலாமே தவிர, 30% சரிவு என்பது தற்போதைய பொருளாதாரச் சூழலில் சாத்தியமில்லை என யுபிஎஸ், ஜேபி மோர்கன் போன்ற பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சில நிபுணர்கள் இந்த ஆண்டு இறுதியில் தங்கம் மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications