ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உண்டு..காதுகள் இல்லை..முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு
ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய பாஜக அரசின் ஆளுநர்களுக்கு வாய்மட்டும்தான் உண்டு, காதுகள் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் கேள்வி-பதில் அறிக்கையில் பாஜக அரசின் ஆளுநர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
உங்களில் ஒருவன் கேள்வி பதில் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவி மடுப்பார்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு நிரந்தரமாகத் தடைவிதிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி விட்டார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் காலதாமதமாக முடிவெடுக்கிறார் அல்லது முடிவெடுக்காமலேயே கிடப்பில் போடுகிறார் என தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான திருத்தச் சட்டம், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு 10 மாதங்களாக, பரிசீலிக்கப்படாமல் உள்ளது. நீட் விலக்கு சட்ட மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி அவருக்கு அனுப்பப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் பல மாதங்கள் காலம் தாழ்த்தினார்.
இது குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஆளுநர், அந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் பேசிய தமிழகம் என்ற வார்த்தை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு என்ற வார்த்தையை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கினர். சட்டசபையில் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்காமல் சென்றதும் சர்ச்சையை உருவாக்கியது.

டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உட்பட பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன
கேரளாவில், 'நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவிநீக்கம் செய்யுங்கள்' என்று முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பாடு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கடுமையான முட்டல் மோதல் கடந்த காலங்களில் நிலவியது.
அதுபோலவே கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழகத்தில் ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து இன்று வரையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது ராஜ்பவன். அன்றைய தினம் முதலேதமிழக ஆளுநர் ரவியின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படகிறது. இந்த நிலையில்தான் ஆளுநர்களின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்












Click it and Unblock the Notifications