கோவையிடம் கற்க வேண்டிய பாடம்.. தாம்பரம் -திருச்சி 8 வழிச்சாலை.. மத்திய அரசு தாமதிப்பது ஏன்?
சென்னை: 2010ம் ஆண்டு திட்டமிட வேண்டிய திட்டத்தை 2025ல் திட்டமிட்டதால் தான் இன்று ஏர்போர்ட் சென்னைக்கு 70 கிமீ தள்ளி போயிருக்கிறது. இப்படியான ஒரு இக்கட்டான நிலை தான் சென்னை திருச்சி 8வழிச்சாலையை சொல்லலாம்.. இதில் கோவை தான் சரியான புத்திசாலித்தனத்தோடு அரசு எல்லாவற்றையும் செய்தது.. அவினாசி முதல் கோவை வரை ஒரு சிக்னல் கூட கிடையாது.. ஒரு கிராஸிங் கிடையாது.. எல்லாமே மேம்பாலம்...8வழிச்சாலையாகவும் போட்டுவிட்டார்கள்.
அதேபோல் நகரம் தொடங்கும் நீலாம்பூர் தொடங்கி கோவையின் மையப்பகுதி வரை மேம்பாலமும் இருக்கிறது. இப்படி தொலைக்நோக்கோடு தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு வரை மேம்பாலம் அமைத்திருந்தால் ஓரளவு பிரச்சனையை சமாளித்திருக்க முடியும். அதேபோல் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையை போல் சென்னை திருச்சி சாலையை அமைத்திருந்தால்... எந்த பிரச்சனையும் வந்திருக்காது.. இப்போது பெரிய சிக்கலாக வந்து நிற்கிறது.

ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது அதன் சாலைகளின் வேகத்தைப் பொறுத்தது. ஆனால், தமிழகத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் தாம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இன்று ஒரு 'வாகனங்களுக்கு ஜெயிலாகவே' மாறியிருக்கிறது. எப்போது வெளியே வருவோம் என்று ஏங்க வைத்துவிடுகிறது. 2010-லேயே திட்டமிட வேண்டிய பரந்தூர் விமான நிலையத் திட்டம், இன்று 2026-க்குப் பிறகு திட்டமிடப்படுவதால் சென்னைக்கு 70 கி.மீ தள்ளிச் சென்றுவிட்டது. இதேபோன்ற ஒரு வரலாற்றுப் பிழையைத்தான் சென்னை - திருச்சி 8 வழிச்சாலை விவகாரத்திலும் நாம் செய்துகொண்டு வருகிறோம்.
மேற்கு மண்டலத்தின் வளர்ச்சியில் கோவை ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. குறிப்பாக அவினாசியில் இருந்து கோவை வரை பயணிப்பவர்கள் ஒரு சிக்னல் கூட இல்லாமல், ஒரு குறுக்கீடு கூட இல்லாமல் சீராகச் செல்ல முடிகிறது. 8 வழிச்சாலைகளும், நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட மேம்பாலங்களும் அங்கு பயண நேரத்தை அடியோடு குறைத்துள்ளன. கோவை மாநகரம் தொடங்கும் நீலாம்பூர் முதல் நகரின் மையப்பகுதி வரை நீளும் மேம்பாலங்கள், வளர்ச்சியை முன்கூட்டியே கணித்த திட்டமிடலுக்குச் சான்றாக பார்க்கலாம்.
கோவையைப் போலவே, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை அன்றே ஒரு நீண்ட அடுக்கு மேம்பாலத்தை அமைத்திருந்தால், இன்று தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் மணிக்கணக்கில் பரனூர் வரை சித்ரவதையை அனுபவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
"ஒரு சாலையை அமைப்பது என்பது வெறும் தார் போடுவது அல்ல; அது அந்தப் பகுதியின் அடுத்த 50 ஆண்டுகால மனித உணர்வுகளையும், தேவைகளையும் சுமந்து செல்வது. சென்னை - திருச்சி சாலையை 20 வருடம் முன்பே போட்டுவிட்டோம். ஆனால் எந்த அளவிற்கு வரும் என்பதை கவனிக்கக தவறியதற்குதான் பெரிய விலையை நாம் கொடுக்கிறோம். இன்று சாமானிய மக்கள் ஒவ்வொரு வாரமும் ஊருக்கு செல்வது என்பது நரக வேதனையாகி இருக்கிறது.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையைப் போல, எந்தத் தடங்கலும் இல்லாத அதிவேகப் பாதையாகச் சென்னை - திருச்சி சாலை 2010ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது தாமதம் ஆனதால், தொடவே முடியாத அளவிற்கு சாலையின் இருபுறமும் கட்டிடங்கள் அதிகரித்துவிட்டன. ஏனெனில் சாலையின் இருபுறமும் கடைகள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நெருக்கமாக அமைந்துவிட்டன. இவற்றை இடித்துவிட்டு விரிவாக்கம் செய்வது மிக அதிக செலவு பிடிக்கும் காரியம் என்பதோடு, சமூகப் போராட்டங்களுக்கும் வழிவகுக்கும். இதனால்தான், மத்திய அரசு தற்போதைய சாலையை விரிவாக்குவதை விட, "சென்னை - திருச்சி பசுமை வழி விரைவுச் சாலை" என்ற புதிய பாதையை உருவாக்கத் திட்டமிட்டது.
எந்தவொரு பெரிய சாலைத் திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்துவதுதான் மிகப்பெரிய தலைவலி. விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகள் வழியாகச் சாலை செல்லும்போது சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் ஒரு முக்கிய காரணமாகிறது.
சென்னை - திருச்சி புதிய விரைவுச் சாலைத் திட்டத்திற்கு சுமார் ரூ. 14,000 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாரத்மாலா திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், விரிவான திட்ட அறிக்கை (DPR - Detailed Project Report) தயாரிப்பதிலும், அதில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்களாலும் காலதாமதம் ஆகிறது.
முழு சாலையையும் உடனடியாக மாற்ற முடியாததால், மத்திய அரசு தற்போது 'துண்டு துண்டாக' வேலைகளைச் செய்து வருகிறது. அதன்படி தான் செங்கல்பட்டு தொடங்கி உளுந்தூர்பேட்டை வரை ஆங்காங்கே மேம்பாலங்களை கட்டி வருகிறது.இந்த பால வேலைகள் தான் நெரிசலுக்கு காரணமாக இருக்கின்றன.
தாம்பரம் - செங்கல்பட்டை பொறுத்தவரை சிக்னலுக்கு சிக்னல் மேம்பாலம் அமைத்தார்கள். ஆனால் அது எந்த பலனும் கிடைக்கவில்லை.. தற்போதைய நிலையில் ஹைதராபாத்தில் உள்ளது போல, பஸ் பே தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை அமைத்திருக்க வேண்டும். அதனை அமைக்க தவறிவிட்டதால், இப்போது உள்ள ஒரே வழி.. கிளாம்பாக்கம் தொடங்கி பரனூர் வரை ஒரே மேம்பாலம் அமைப்பது தான்.. அதனை அரசு செய்தால் மட்டுமே ஓரளவு தப்பிக்க முடியும். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. மேம்பாலம் அமைக்க சாலையில் தூண்கள் அமைக்க தொடங்கினால், குறைந்தது 3 முதல் 5 வருடம் வரை நெரிசல் கடுமையாக இருக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.














Click it and Unblock the Notifications