மோடி அலையில் காங்கிரஸ் காலி.. ரொம்ப மோசமாக தோற்ற ‛கை’.. குஜராத் பாஜக வெற்றியால் குஷ்பு ‛குஷி‛
சென்னை: குஜராத் மாநிலத்தில் பாஜக சாதனை வெற்றி பெற்றுள்ளது. பிரமதர் மோடியின் அலை இன்னும் இருப்பதை குஜராத் தேர்தல் நினைவுப்படுத்துகிறது. ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றி வரும் நிலையில் ரொம்ப மோசமாக காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. இமாச்சலிலும் ஓட்டு சதவீதம் அதிகம் பெற்று நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். என பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு கூறினார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடந்தது.
இந்த 2 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஒன்றாக இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
குஜராத்தில் அடித்து நொறுக்கும் பாஜக! 135 பேர் பலியான மோர்பி தொகுதியில் நிலை என்ன? காங். ரொம்ப பாவம்

இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி
இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால் இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய உள்ளது.

குஜராத்தில் பாஜக அமோக வெற்றி
மாறாக குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் இந்த தேர்தலிலும் வரலாற்று வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. .காங்கிரஸ் 16 தொகுதகிளிலும், ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இங்கு ஆட்சியமைக்க 92 இடங்களில் வெற்றி பெற்றால் போதும். ஆனால் பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதித்துள்ளது. இதனால் மீண்டும் பாஜக ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

நடிகை குஷ்பு பேட்டி
இந்நிலையில் தான் பாஜக வில் உள்ள நடிகை குஷ்பு குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில தேர்தல் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு இந்த 2 மாநில தேர்தல்கள் பற்றி கூறியதாவது:

மோடி அலையால் காங்கிரஸ் காலி
தேர்தல் அறிவிக்கப்பட்டபோது குஜராத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என பல பேர் கூறினார்கள். ஆனால் குஜராத்தில் இதுபோன்ற மிகப்பெரிய வெற்றியை யாரும் பெறவில்லை. தொடர்ந்து 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மேலும் முந்தைய பாஜகவின் சாதனையை தாண்டி தற்போது அதிக தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளோம். பிரதமர் மோடியின் அலை இன்னும் இருப்பது குஜராத் தேர்தல் மூலம் இன்னும் தெளிவாகி உள்ளது.

இமாச்சலிலும் வெற்றி தான்
இமாச்சல் பிரதேசத்தை பொறுத்தமட்டில் நாங்கள் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. இமாச்சல பிரதேசத்திலும் வெற்றி என்றே நாங்கள் எடுத்து கொள்ள உள்ளோம். ஏனென்றால் அந்த மாநிலத்துக்கு பாஜவுக்கான ஓட்டு என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சாதாரணமான விஷயம் தான். இருப்பினும் அதில் முந்தைய தேர்தலை விட எந்த அளவுக்கு முன்னேறி உள்ளோம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

காங்கிரஸ் ரொம்ப மோசமான தோல்வி
பிற கட்சியில் இருப்பவர்கள் பாஜவுக்கு தானாக தான் வருகிறார். நாங்கள் ஒன்றும் கொக்கிபோட்டு அவர்களை இழுப்பது இல்லை. தேசத்துக்காக பிரதமர் மோடி உழைப்பதை பார்த்து அவர்கள் பாஜகவில் வந்து இணைகின்றனர். குஜராத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை ராவணன் என விமர்சனம் செய்தார். நேற்று டெல்லி மாநகராட்சி தேர்தலிலும், இன்று குஜராத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ரொம்ப மோசமாக தோல்வியடைந்துள்ளது.

ராகுல் காந்தியின் யாத்திரை எதிரொலிக்கவில்லை
ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார். ஆனால் அவரது யாத்திரை தேர்தல் முடிவில் எதிரொலிக்கவில்லை. என்னை பொறுத்தவரை பாஜகவுக்கு இமாச்சல பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி தான். தோல்வியை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். காங்கிரஸ் கட்சியினருக்கு தலைமை மீது நம்பிக்கை இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி எம்எல்ஏக்களை பிற மாநிலங்களுக்கு அழைத்து செல்ல உள்ளார். கட்சியினரை கட்சியினர் மீது பயமாக உள்ளனர்'' என்றார்.