நிலம் உள்ளோருக்கு ஹேப்பி.. பட்டா வாங்கிட்டீங்களா? விற்பனை பத்திரம் இருக்கா? இன்று ஸ்பெஷல் கேம்ப்
சென்னை: தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மேலும் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், முக்கிய தகவல் ஒன்று தற்போது வீட்டு வசதி வாரியம் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஏழை, எளிய மக்கள் பல்வேறு இடங்களில் புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களை பல வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், இவர்களுக்கெல்லாம் முறைப்படி பட்டா கிடைக்கவில்லை. அதனால்தான், 86000 பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி தந்திருந்தார்.

அதற்கேற்றார்போல், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருவதுடன், ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத்தொகையையும் செலுத்தியதுமே, அவர்களுக்கு விற்பனை பத்திரமும் வழங்கப்படுகிறது.
விற்பனை பத்திரங்கள்
இதற்காகவே வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெறுவதற்கு ஏதுவாக, வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், விற்பனை பத்திரங்கள் உட்பட ஆவணங்களை ஒப்படைத்து, பட்டா பெற்றுக் கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் இன்று மார்ச் 19 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவுக்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாம் தேதிகள் - நேரம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்துக்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் வருகின்ற மார்ச் 19,20 மற்றும் 21 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
மீண்டும் விண்ணப்பம் வேண்டாம்
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏற்கெனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம்" என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications