சில் மழை அவ்வளவுதான் ஓவர்.. வைத்து செய்ய போகும் கோடை வெப்பம்.. சென்னையில் கிளைமேட் என்ன தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில், வரும் நாட்களில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே கோடை வெயிலைத் தணிக்கும் வகையில் மழை பெய்து வந்தது. இதற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியே காரணமாக இருந்தது. இதனால் தமிழகத்தில் கணிசமாக மழை கிடைத்தது.

கோடை வெயில் தமிழக மக்களை வாட்டி வதக்கி வந்த நிலையில், இந்த தொடர் மழை வெப்பத்தைத் தணிக்க உதவியது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது.
மழை: இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (11.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "மோகா" புயலானது நேற்று (11.05.2023) மாலை 1730 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
அது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (12.05.2023) காலை 0530 மணி அளவில் மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மார் கடற்கரையை 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கக்கூடும்.
மிதமான மழை: இன்று (மே 12) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதேபோல நாளை (மே 13) முதல் மே 16 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..
அதிகபட்ச வெப்பநிலை : இன்று (மே 12) முதல் மே 16 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.. அதேபோல மே 14, 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை மூலனூர் (திருப்பூர்), தல்லாகுளம் (மதுரை) 60 மிமீ, சுருளக்கோடு (கன்னியாகுமரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மதுரை தெற்கு தலா 50 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், புயல் காரணமாக வரும் மே 15ஆம் தேதி வரை கடலில் காற்று வீசும் என்பதால் நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும், ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications