நீலகிரி, கோவை, தேனியில் இடி மின்னலுடன் மிக கனமழை - 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை விடாது பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி, ஜம்புகுட்டப்பட்டி, சோழவரத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், கொட்டாரத்தில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.
புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் மழை
நாளை கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 18ஆம் தேதி வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
Recommended Video

டெல்டாவில் மழை
19ஆம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 20ஆம் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், மற்ற வட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மிதமான மழை
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள்
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

கேரள கடலோர பகுதிகள்
இதேபோல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா- லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.

சூறாவளிக்காற்று
16 மற்றும் 17ஆம் தேதிகளில் குமரிக்கடல், மன்னார்வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இரண்டு நாட்களுக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications