1 நாள் பிரச்சாரத்தையே நிறுத்திவிட்டு.. ஸ்டாலின் செய்த காரியம்.. இப்போ தேசிய அளவில் ஃபோகஸ்.. சம்பவம்!
சென்னை: கடந்த சில தினங்களாக இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் மையப்புள்ளியாக தமிழ்நாடு மாறியிருக்கிறது. டெல்லியின் அதிகார பீடங்களில் "தொகுதி மறுவரையறை" (Delimitation) என்னும் கத்தி தென்னக மாநிலங்களின் தலையெழுத்தை மாற்றக் காத்திருந்த வேளையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்று தென்னிந்தியர்கள் பலரும் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர்.

2023-ல் விதைக்கப்பட்ட எதிர்ப்பு
தொகுதி மறுவரையறை என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது தென்னக மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் செயல் என்பதை திமுக 2023-லேயே கணித்தது. மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குத் தண்டனையும், மக்கள் தொகையைப் பெருக்கிய மாநிலங்களுக்குப் பரிசும் வழங்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது என்ற குரலை அறிவாலயம் அப்போதே ஒலிக்கத் தொடங்கியது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் இந்த விவகாரத்தில் மெல்லத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றபோது, ஸ்டாலின் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு மிகவும் தீர்க்கமாக இருந்தது.
நாடாளுமன்றத்தை அதிரவைத்த உரைகள்
கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள் இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமானவை. திமுக-வின் மூத்த எம்பிக்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் உரைகள் அனல் பறந்தன.
ஆ.ராசாவின் தர்க்கரீதியான வாதங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் நுணுக்கங்களை முன்வைத்து அவர் எழுப்பிய கேள்விகள் ஆளுங்கட்சியைத் திணறடித்தன.

கனிமொழியின் உரை, தென்னக மாநிலங்களின் வரிப்பகிர்வு மற்றும் உரிமைகள் குறித்த உணர்ச்சிகரமான, அதே சமயம் தரவுகள் மிக்க பதிவாக அமைந்தது. முக்கியமாக கருப்பு, நீலம் பற்றி பேச்சு, காளி பற்றிய பேச்சு எல்லாம் தேசிய அளவில் ஹிட். முக்கியமாக 1 நாள் முழுக்க தேர்தல் பிரச்சாரத்தையே கவனிக்காமல்.. பிரச்சார களத்தையே போராட்ட களமாக மாற்றியது திமுக!

வெறும் பேச்சுடன் நிற்காமல், கறுப்புச் சட்டை அணிந்து, கறுப்புக் கொடி ஏந்தி, மசோதாவின் நகல்களை எரித்து திமுக முன்னெடுத்த போராட்டங்கள், இது ஏதோ ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மைக்கான போர் என்பதை உலகிற்குப் பறைசாற்றியது.

ஒற்றை மனிதராகத் தெற்கைத் திரட்டிய ஸ்டாலின்
கர்நாடகா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக-விற்கு எதிரான குரல்கள் இருந்தாலும், டெல்லிக்கு எதிராக இவ்வளவு வீரியமான எதிர்ப்பைக் காட்ட அந்த மாநில அரசுகள் தயக்கம் காட்டின. இந்த இடத்தில்தான் ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று, தென்னகத்தின் 'ஒற்றைக் குரலாக' மாறினார்.

"எங்கள் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்கிற அவரது பிடிவாதம், இறுதியில் மத்திய அரசை ஒரு படி பின்வாங்க வைத்திருக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, போதிய பெரும்பான்மை இல்லாததால் லோக்சபாவில் தோல்வியடைந்தது. இதையடுத்து தொகுதி மறுவரையறை மசோதா வாபஸ் பெறப்பட்டது. திமுக எம்பிக்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த நிலையில்.. தற்போது மசோதா வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற வேண்டுமானால், அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை.
மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் 543 பேரில், குறைந்தது 361 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும்.
ஆனால், வாக்கெடுப்பின் போது:
ஆதரவாக விழுந்த வாக்குகள்: 298
எதிராக விழுந்த வாக்குகள்: 230

தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதோடு பிணைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு முக்கிய மசோதாக்களை அரசு கைவிட்டது.
தற்போது இந்த வெற்றிக்குக் கேரளா முதல் ஆந்திரா வரை உள்ள பல எதிர்க்கட்சிகளும், நடுநிலையாளர்களும் ஸ்டாலினுக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications