விடிந்ததுமே வந்த அறிவிப்பு.. ஜிகே வாசன் மனதை மாற்றிய 4 பேர்.. ஈபிஎஸ் அணி லீடர்கள் பேசியது என்ன?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். நேற்று, ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த குழுவினர் ஜிகே வாசனை சந்தித்துப் பேசிய நிலையில், இன்று காலையிலேயே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜிகே வாசன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா போட்டியிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் என ஜிகே வாசன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் நேற்று ஜிகே வாசனை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில், ஜிகே வாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஜிகே வாசன் பேசிய நிலையில், நேற்று ஈபிஎஸ் அணியினர் வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அதிமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணிக் கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

எங்களுக்கே வேண்டும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதுமே, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசினார். மேலும், நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த முறையைப் போல ஈரோடு கிழக்கு தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்தார். அதற்கு ஈபிஎஸ், கூட்டணி நலனுக்காக நல்ல முடிவை எடுப்போம் எனக் கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து, நேற்று காலை அதிமுக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஜிகே வாசனை சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிகே வாசன், எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும் என்பதுதான். அதிமுக, பாஜக, தமாக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கக்கூடாது. எனவே, ஒத்த கருத்தோடு ஓரிரு நாட்களில் கூட்டணிக்கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம் எனக் கூறினார்.

பேசியது என்ன?
ஈபிஎஸ் சார்பாக வாசனிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற குழுவினர், இந்த முறை நாங்கள் போட்டியிடுகிறோம். அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தேர்தல் அவசியம், நாடாளுமன்றத் தேர்தல் வரை பிரச்சனையை இழுக்கக்கூடாது என நினைக்கிறோம். மேலும், ஆளுங்கட்சியை எதிர்த்து உங்களால் செலவு செய்து ஜெயிப்பது கடினம். இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 2024 தேர்தலிலும் நமது கூட்டணிக்கு பலன் தரும். திமுகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க வேண்டுமானால் அதிமுக நிற்பதே சரியாக இருக்கும் என எடப்பாடி கருதுகிறார் எனப் பேசியதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிக்கு பலம்
அதற்கு, ஜிகே வாசன், கடந்த முறை நாங்கள் போட்டியிட்ட தொகுதி என்பதால் கட்சியினர் மீண்டும் தொகுதி வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும், நீங்கள் போட்டியிட்டால், ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை இறக்குவார், கூட்டணியில் வாக்குகள் சிதறும், எங்களுக்கு தொகுதியை ஒதுக்கினால், பாஜக, ஓபிஎஸ் அணி சார்பில் தனித்து நிற்க மாட்டார்கள் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஈபிஎஸ் தரப்பினர், ஓபிஎஸ் தரப்பு போட்டியிட்டாலும் அங்கு நமக்கு பாதிப்பு வராது, கூட்டணியை வலுவாக்க அதிமுக போட்டியிடுவதுதான் நல்லது என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு
இந்நிலையில் தான் தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். "தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக விரும்பியது. மக்கள் நலன், கூட்டணி கட்சிகளின் நலனை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications