புற்றுநோய் மருந்துகள் விலை குறைக்கப்பட்டது எப்படி.. மக்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய மிகப்பெரிய உண்மை
சென்னை: மத்திய அரசு புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயிக்கும் நடவடிக்கையை எடுத்தன் காரணமாக புற்றுநோய் மருந்துகள் விலை குறைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக புற்றுநோய் மருந்துகளை வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. 543 மருந்துகளின் விலையை அதிரடியாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த உத்தரவு சாதாரணமாக நடந்துவிடவில்லை. மருந்து விநியோகிஸ்தரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கே ரூ. 11,000 விலையுள்ள மருந்தை ரூ. 1,30,000 கட்டணம் வசூலித்துள்ளது. அவரது அறசீற்றம் தான், இன்று புற்றுநோய் மருந்துகளின் விலை குறைய முக்கியமான காரணம்.
நாட்டில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பில் மருந்துகளின் விலை மிகக்கடுமையாக இருக்கிறது. மருந்து விநியோகிஸ்தர்கள் தரும் விலையில் இருந்து 700 சதவீதம் வரை அதிகமாக விலையில் புற்றுநோய் மருந்துகள் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ஏழை மற்றும் எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே நோயால் போராடும் மக்கள், மருந்து வாங்கவும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் மருந்து வாங்க முடியாமல் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு தான் இன்றைய மருந்து குறைப்புக்கு காரணம் ஆகும். அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

கீமோதெரபியில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட ஊசி மருந்தின் மருத்துவ விநியோகஸ்தர் ஒருவரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு மிகவும் புகழ்பெற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு மருந்து விநியோகஸ்தர் மருத்துவமனை அதிகாரிகளிடம், "ஐயா, நான் ஒரு விநியோகஸ்தர். எனக்கு இந்த ஊசி மருந்து ரூ. 11,000 விநியோகஸ்தர் விலையில் கிடைக்கிறது" அதனால் நானே அந்த மருந்தை தருகிறேன் என்று கோரினார். மருத்துவமனை அந்த ஊசி மருந்தை ஏற்க மறுத்ததுடன், அதே ஊசி மருந்துக்கு ரூ. 1,30,000 கட்டணம் வசூலித்தது.
இந்த கொள்ளைக்கு ஏதேனும் நியாயம் காட்ட முடியுமா? இந்த வித்தியாசம் ஏன்? பணம் எங்கே செல்கிறது? என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்பு கடந்த அக்டோபர் 27ம் தேதி மருந்து விலை நிர்ணயம் தொடர்பான வழக்கின் விசாரணையில் மேலே சொன்ன உதாரணத்தைக் குறிப்பிட்டு மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தது.
உச்ச நீதிமன்றம், கீமோதெரபிக்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஊசி மருந்து விநியோகஸ்தருக்கு ₹11,000 விலையில் கிடைக்கும்போது, அதே மருந்தை மருத்துவமனை ₹1,30,000-க்கு வசூலித்ததை எடுத்துக்காட்டி, "இந்த கொள்ளைக்கு ஏதேனும் நியாயம் காட்ட முடியுமா? இந்த வித்தியாசம் ஏன்? பணம் எங்கே செல்கிறது?" என்று கேட்டது. உச்சநீதிமன்றம் இத்தகைய விலை நிர்ணயத்தை கொள்ளை என்று வர்ணித்துள்ளது.
மருத்துவமனைகள் தங்கள் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்றாலும், மருந்துகளை அசல் செலவை விட 100 அல்லது 200 மடங்கு விலைக்கு விற்பதை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தது. இந்த வழக்கு, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்தக் கோரி தொடரப்பட்ட மனுக்களின் பகுதியாக இருந்தது.
மத்திய அரசு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், புற்றுநோய் மருந்துகளில் 170% முதல் 700% அல்லது அதற்கு மேல் மார்க்-அப் இருப்பதாகவும், நோயாளிகளுக்கு மருத்துவமனைகளுடன் பேரம் பேசும் திறன் மிகக் குறைவு என்பதால் இது "மார்பிராக்டீஸ்" என்றும் ஒப்புக்கொண்டது. அரசு non-scheduled anti-cancer medicines-க்கு 30% trade margin cap கொண்டு வர முடிவு செய்தது; இது விலைகளை 20-70% குறைக்கலாம் என்று தெரிவித்தது. எனினும் நீதிமன்றம், இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஏன் புற்றுநோய் மருந்துகளுக்கு மட்டும் கொண்டு வருகிறீர்கள் என்றும், பல ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.
நீதிமன்றம்,இந்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் செயல்திறனையும் கடந்த கால விசாரணைகளில் கடுமையாக விமர்சித்து இருந்தது. மருத்துவமனைகள் நோயாளிகளை தங்கள் உள்ளக மருந்தகங்களில் இருந்து மட்டுமே மருந்து வாங்கும்படி கட்டாயப்படுத்துவதும், அதிக MRP உள்ள மருந்துகளை விரும்புவதும் இந்த பிரச்சினையின் முக்கிய காரணங்களையும் சுட்டிக்காட்டியது.
இந்த சூழலில் அதிகப்படியான வர்த்தக லாப வரம்புகளை கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை மேலும் மலிவானதாக மாற்றவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் அட்டவணைப்படுத்தப்படாத 137 மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பு சீரமைப்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த 17-ந் தேதி அறிவித்திருந்தது. மேலும், உற்பத்தியாளர்கள் தங்களின் திருத்தப்பட்ட பட்டியலை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தி இருந்தது.
இந்தநிலையில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் 543 'பிராண்டுகளுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை பட்டியலை மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இந்த திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை அடுத்த மாதம் (நவம்பர்) மாதம் 9-ந்தேதி முதல் அமலுக்கு வரும். திருத்தப்பட்ட விலைப்பட்டியலில், நிறுவனங்களால் நேற்று முன்தினம் வரை சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களும் அடங்கி உள்ளன.
திருத்தப்பட்ட பட்டியலின்படி சில புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை விவரம் வருமாறு:-
ஆர்.பி.ஜி. லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் புல்பிராக்கா ஊசி மருந்து இப்போது ரூ.26,072.16-க்கு விற்கப்படுகிறது. நவம்பர் 9-ந்தேதி முதல் இது ரூ.5,491-க்கு விற்கப்படும். அதே நிறுவனத்தின் டாப்ரூமாப் ஊசிமருந்து தற்போது ரூ.22,031.25-க்கு விற்கப்படுகிறது. இனி இது ரூ.5,941-க்கு விற்கப்படும். அபோட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பெவாசிமாப் மருந்து தற்போது ரூ.22,031.25-க்கு விற்கப்படுகிறது. இனி இது ரூ.5,930.13-க்கு விற்கப்படும்.
மார்பக புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆர்.பி.ஜி. லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் அனாஸ்ட்ரோசோல் மருந்து, 10 மாத்திரைகளுக்கு தற்போது ரூ.695.76 ஆக இருக்கிறது. இது இனி ரூ.73-க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் அசாசிடிடின் ஊசிமருந்து ரூ.6,337-ல் இருந்து ரூ.1,495.04 ஆக குறைத்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. டசாட்டினிபின் பிராண்டான "டசானத் 20" என்ற 60 மாத்திரை தொகுப்பின் விலை ரூ.2,812.50-ல் இருந்து ரூ.1,085.93 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 543 மருந்துகளுக்கு திருத்தப்பட்ட விலைப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான திருத்தப்பட்ட விலைகளை உற்பத்தியாளர்கள் சமர்ப்பிக்கும்போது இந்த பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலைக்குறைப்பால் புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு சுமை கணிசமாக குறைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.




Click it and Unblock the Notifications
