வழக்கம் போல் வேலூரு தான் டாப்.. ஆறுதல் சொல்லவே முடியாது சென்னைக்கு.. வானிலை மைய ரிப்போட்டை பாருங்க!
சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் வெயில் கொடுமை குறையாது என்றே வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மிதமான மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறையாது என்றே கூறியுள்ளது
மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ல கீழடுக்கு சுழற்றி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 31ம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜுன் 1ம் தேதி முதல்3ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38/39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஜூன் 2ம் தேதி மற்றும் 3ம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேலேகுறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை பொழிவு: தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 7 செமீ மழை பெய்துள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகுடியில் 6 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், பெரம்பலூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய ஊர்களில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், கன்னியாகுமரி, தேனியில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.
வெப்பநிலை: வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக வேலூரில் 40.7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. கன்னியாகுமரி , மதுரை, கடலூர் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான வெப்ப நிலை இருந்தது.












Click it and Unblock the Notifications