அதிரடி... சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.135 குறைவு.. வணிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாக ரூ.135 குறைக்கப்பட்டது. இதன்மூலம் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என 2 வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி மாற்றம் செய்து வருகின்றன.

சமீப காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இல்லத்தரசிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் மாதாந்திர பட்ஜெட்டும் கையை கடித்தது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.2,500யை தாண்டியது. இதனால் டீ, காபி, உணவு பொருட்களின் விலைகள் சில இடங்களில் அதிகரிக்க துவங்கின. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இதனால் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டரின் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்மூலம் சென்னையில் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.2373க்கு விற்பனையாகும். இந்த விலைக்குறைப்பு மூலம் மும்பையில் ரூ.2,307 க்கு விற்ற சிலிண்டர் ரூ.2,171க்கும், கொல்கத்தாவில் ரூ.2,455க்கு விற்ற சிலிண்டர் ரூ.2,322க்கும் விற்பனையாகும். இருப்பினும் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.












Click it and Unblock the Notifications