Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாடு; ஒரே வரி என்பது ஸ்லோகன் அரசியலா?- பழனிவேல் தியாகராஜன் கருத்து சரியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டியை பாஜக ஒன்றிய அரசு அமல்படுத்தியதிலிருந்து திமுக அதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தப் புதிய வரிவசூலால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது எனப் பல புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து விவாதித்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "ஒரு நாடு, ஒரு வரி என்று ஒரு ஸ்லோகனை சொல்கிறார்கள். இப்படி ஸ்லோகன் சொல்லி அரசியல் செய்வது சுலபம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது ரொம்ப கஷ்டம்.

சில நாள்களுக்கு முன்னால் எனது வீட்டிற்கு வந்திருந்தார் ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா. அவரிடம் நான், 'ஒருநாடு, ஒரு வரி என்றால் நம் நாட்டில் அரசியல்சாசனபடி ஏன் இத்தனை சட்டசபைகள் உள்ளன' என்று கேட்டேன்.

பாஜக ஸ்லோகன் பாலிடிக்ஸ் உண்மையா?

பாஜக ஸ்லோகன் பாலிடிக்ஸ் உண்மையா?

ஒரே நாடு, ஒரே சட்டம் என்றால் ஏன் இத்தனை நீதிமன்றங்கள் இருக்கின்றன? ஒரு நாடு, ஒரு வரி என்றால், ஏன் நாம் மாநிலத்திற்கு மாநிலம் வணிகவரித்துறையை தனித்தனியாக வைத்துள்ளோம்? வணிகவரி சட்டங்களை ஏன் வகுக்கிறோம்? மாற்றுகிறோம்?

ஆகவே, இந்தமாதிரி ஸ்லோகன் வைத்து கவர்ச்சியாகப் பேசுவது அரசியலுக்குச் சரிப்பட்டு வருமே ஒழியே செயல்பாட்டிற்குச் சரியாக வராது. கூட்டாட்சி தத்துவத்தின்படி அனைத்து மாநிலங்களின் உரிமைகளும் காப்பாற்றப்பட வேண்டும். அந்த உரிமைகள் காப்பாற்றப்பட்டதால்தான் இது ஒரே நாடு" என அதிரடியான கருத்தை முன்வைத்தார்.

உண்மையில் ஜிஎஸ்டி வரி வசூலால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறதா? தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் என்ன சொல்கிறார் எனக் கேட்டோம். அவர் ஒட்டுமொத்த பிரச்சினையின் முழு விளக்கத்தையும் விரிவாகப் புரியவைத்தார். அவர். "ஒரு மாநிலமாக நம்முடைய வரிவருவாயை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதுதானே முக்கியம். இந்த ஜிஎஸ்டியால் நாம் அந்த மாநில உரிமையை இழந்திருக்கிறோம் இல்லையா? அதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டுமா? வேண்டாமா? அதுதான் முக்கியமான விவாதம்.

ஆரம்பத்தில் ஹோட்டலில் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்திக்கு எல்லாம் அதிகமான வரியைப் போட்டார்கள். அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு உள்ளது. அந்த அரசாங்கம் உணவுப் பண்டங்களுக்கான வரியைக் குறைத்துப் போடலாம் என நினைக்கலாம்.

அதன் மூலம் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்து அந்த முடிவை மாநில அரசு எடுக்கலாம். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவசூல் முறை என்பது அதற்கு எதிராக இருக்கிறது இல்லையா? அதேபோல வேறு சில தொழில்களுக்கு அதிக வரி போடலாம் என்று கூட நினைக்கலாம்.

மாநில உரிமையை இழந்ததிருக்கிறோமா?

மாநில உரிமையை இழந்ததிருக்கிறோமா?

இப்படி மாநிலம் முடிவு செய்யவேண்டிய உரிமையை நாம் விட்டுக் கொடுத்துள்ளோம். அதுதான் ஜிஎஸ்டியால் நமக்கு நேர்ந்த பெரிய இழப்பு. வரி விதிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.

இதை ஏதோ நாம் புதியதாகக் கேட்கவில்லை. சட்டத்தில் மாநில அரசின் வரி உரிமை எவ்வளவு. மத்திய அரசுக்கு வரி உரிமை எவ்வளவு என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை ஜிஎஸ்டிக்காக மாநில அரசு விட்டுக் கொடுத்துள்ளது.

எதன் அடிப்படையில் விட்டுக் கொடுத்தோம் என்றால், ஜிஎஸ்டி கவுன்சில் என்பது ஜனநாயகமாக நடைபெறும் என வாக்குக் கொடுத்ததால் செய்தோம். வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று சொன்னார்கள். மூன்றில் ஒரு பங்கு வரி உரிமை ஒன்றிய அரசுக்கு இருக்கும். மீதம் உள்ள 2% மாநில அரசுக்கு இருக்கும் என வாக்களித்தார்கள்.

இதை எல்லாவற்றைவிட முன்பு இருந்த அளவு வரிவசூல் இல்லாமல் போனால், அதனால் ஏற்படக்கூடிய இழப்புத் தொகையை இழப்பீடாகக் கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால், இவை எதுவுமே வாக்குறுதி அளித்ததைப் போன்று முறையாகக் கிடைக்கவில்லை.

குறிப்பாக இந்த வரிவருவாய் இழப்பீட்டை 5 ஆண்டுகள் வரை ஒன்றிய அரசு அளிக்கும் என்றார்கள். ஆனால் அதிகமாக வருவாய் வந்தபோது ஒன்றிய அரசே எடுத்துக் கொண்டது. குறைவாக வந்தபோது மாநில அரசைக் கடன் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள்.

ஐந்து வருடம் வரை ஏன் இழப்பீட்டு கொடுக்கப்படும் என்று கால வரம்பை நிர்ணயித்தார்கள் என்றால், அதுவரை இந்த ஜிஎஸ்டி நடைமுறை நிலையான தன்மையை எட்டிவிடும் என எதிர்பார்த்ததால் சொன்னார்கள். ஆனால் இதுவரை ஜிஎஸ்டி வரிவசூல் முறை நிலைத்தன்மையை அடையவில்லை. ஒன்றிய அரசும் அந்த இழப்பீட்டிற்கான கால வரம்பை நீட்டிக்கவில்லை.

பாஜக சொன்ன 14% வளர்ச்சி வந்ததா? :

பாஜக சொன்ன 14% வளர்ச்சி வந்ததா? :

நமது மாநிலத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நம் மாநிலத்திற்கு ஜிஎஸ்டிக்கு முன்னால் வரிவருவாய் அதிகமாக இருந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் வரிவருவாய் குறைந்துள்ளது. ஆண்டாண்டுக்கு 14% வளர்ச்சி இருக்கும் என்றார்கள். ஆனால் அத்தனை சதவீதம் உயரவில்லை.

ஆக, எப்படிப் பார்த்தாலும் மாநிலங்களின் உரிமை முற்றிலுமாக வரிவருவாயை பொறுத்தளவில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்படிப் பாதிக்கப்படும் போது அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசிடம் முறையிடலாம் என்றால் அதற்கு சில மாநிலங்கள் முட்டுக்கட்டையாக உள்ளன.

காரணம், அந்த மாநிலங்களில் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சிதான் ஆட்சியில் உள்ளது. ஆகவே மாநில உரிமையைவிடச் சொந்தக் கட்சியின் நலன் முக்கியம் என்பதால் பின்வாங்குகிறார்கள். அங்கும் நீதி கிடைக்கவில்லை. அதற்கு ஒன்றிய பாஜக அரசு மறைமுகமாக முட்டுக்கட்டை போடுகிறது" என்கிறார்.

அவரிடம் நமது மாநிலம் மத்திய அரசுக்கு அதிக அளவுக்கு வரிவருவாயை ஈட்டித்தருகிறது. ஆனால், நாம் செலுத்தும் அளவுக்குத் திரும்ப நமக்கான நிதி வருவதில்லை. பீகார், உ.பி. போன்ற மாநிலங்கள் பின் தங்கி உள்ளன எனக் காரணம் காட்டி நமது வருவாயை அந்த மாநிலங்களுக்கு அள்ளி வழங்குகிறது ஒன்றிய அரசு.

வருவாய் அதிகம் தரும் மாநிலத்தைவிட, குறைந்த வருவாயை அளிக்கும் மாநிலங்கள் பீகார், உ.பி. இலாபம் அடைகின்றன. இதற்கு மக்கள் தொகையைக் காரணமாகக் காட்டுகிறது ஒன்றிய அரசு.

நமது மாநிலம் ஒன்றிய அரசு அறிவுறுத்திய குடும்பக் கட்டுப்பாட்டை முறையாக நடைமுறைப்படுத்தியதால் மக்கள் தொகைப் பெருக்கத்தைத் தடுத்துள்ளோம். ஆனால், மேற்சொன்ன மாநிலங்கள் 80களில் ஒன்றிய அரசு சொன்ன குடும்பக் கட்டுப்பாட்டைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.

ஆகவே மக்கள் தொகை அம்மாநிலங்களில் கூடி உள்ளது. அரசின் கொள்கையைக் கடைப்பிடிக்காத மாநிலத்திற்குச் சாதகமாகச் செயல்படும் ஒன்றிய அரசு, சரியாகச் செயல்படுத்திய தமிழ்நாட்டை வஞ்சிப்பது சரியா? எனக் கேட்டோம்.

அதற்கு அவர், "ஒன்றிய அரசு வசூல் செய்யக் கூடிய வரிவருவாயை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுப்பது நிதிக்குழுதான். அதாவது மாநில அரசு கணக்கில் உள்ள வரிவருவாயில் ஒன்றிய அரசு கைவைக்க முடியாது.

ஆனால், ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் வரிவருவாயில் மாநில அரசு கைவைக்க முடியாது. மாநில அரசுக்கு வரும் வருவாயைவிட மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரிவருவாய்தான் அதிகம். செலவீன பொறுப்புகள் என்பது அதிகமாக மாநில அரசுக்குத்தான் உள்ளது. ஒன்றிய அரசுக்கு செலவீன பொறுப்புகள் குறைவு. ஆனால் வருவாய் அதிகம். ஆனால் மாநிலத்திற்குப் வருவாய் குறைவு பொறுப்புகள் அதிகம். இப்படித்தான் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு எப்படிப் பாதிக்கப்படுகிறது? :

தமிழ்நாடு எப்படிப் பாதிக்கப்படுகிறது? :

ஆகவே மாநில அரசுக்கு ஏற்படும் பற்றாக்குறையைச் சரிசெய்ய ஒன்றிய அரசு தனது வருவாயில் குறிப்பிட்ட பங்கை மாநில அரசுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் எனச் சட்டத்தில் உள்ளது. மாநில அரசுக்குப் பிரித்துக் கொடுப்பது நிதிக்குழுவின் வேலை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி முடிவெடுத்து நிதியைப் பகிர்ந்தளிக்கும்.

நிதிக்குழு efficiency and equity அடிப்படையிலான அளவுகோல்களை வைத்துப் பிரித்து வழங்குவார்கள். இதில் சமீபகாலமாக equity என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

அதன் அடிப்படையில்தான் மக்கள் தொகையைப் பிரதானமாக வைத்து அளவீடு செய்வது. மாநிலத்தின் பரப்பளவு அதிகமாக இருக்கும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு அதனடிப்படையில் அதிக நிதி செல்கிறது.

அதேசமயம் வளர்ச்சியையும் ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும் இல்லையா? தமிழ்நாடு வளர்ச்சியில் உள்ள மாநிலம். ஆகவே அதிக வழிவருவாய் உள்ளது. equity என்பதை அளவீடாக எடுக்கும் போது தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. அதைத்தான் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டுகிறார்.

இப்படி தமிழ்நாடு நிதியமைச்சர் முன்வைக்கும் பல குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையாக உள்ளன. வரிவசூல் முறையில் ஒன்றிய அரசிடம் முறையான தரவுகள் இல்லை என்கிறார். அது உண்மை.

தமிழ்நாட்டிலிருந்து வரிவசூல் எவ்வளவு செய்கிறார்கள் என்று தெரிந்தால், நமக்கு எவ்வளவு திரும்பக் கிடைக்கிறது என்பது தெரியும். அதைக் கொண்டு ஒப்பிடலாம். ஆனால் அப்படி ஒரு தரவே ஒன்றிய அரசிடம் வெளிப்படையாக இல்லையே? ஒருவேளை வைத்திருந்தால் அவர்கள் அதை வெளியிடுவதற்கு மறுக்கிறார்களே?

நாட்டில் உள்ள மக்களின் வறுமையை நாம் கணக்கிட்டுக் கொண்டிருந்தோம். 2014இல் திட்டக்குழுவை மூடிய பிறகு அதை நிறுத்துவிட்டது. அதேபோல வேலைவாய்ப்பு, வேலையில்லா திண்டாட்டம் பற்றிய போதுமான தரவுகள் ஒன்றிய அரசிடம் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றது உ.பி.அரசு. அதை இப்போது எடுக்கக் கூடாது என்கிறார்கள்.

நீதிமன்ற பல வழக்குகளை விசாரிக்கும் போது 'உங்களிடம் இதற்கான என்ன தரவுகள் உள்ளன?' என்று கேள்வி எழுப்புகிறது. ஆகவே அந்தத் தரவுகளைச் சேகரிக்கலாம் என்றால் ஒன்றிய அரசு தடைபோடுகிறது? ஏற்கெனவே சேகரித்து வைத்துள்ள தரவுகளைக் கேட்டாலும் வெளியிடுவதில்லை" என்கிறார்.

அவரிடம் ஒரு நாடு ஒரு வரி என்பது ஸ்லோகன் பாலிடிக்ஸ் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் குற்றஞ்சாட்டுகிறாரே? என்றதற்கு, "அவர் சொல்வது உண்மைதானே. ஒரு நாடு; ஒருவரி என்கிறீர்களே. அது உண்மையில் ஒரு வரியா? வரிவிதிப்புக்கு உலகத்தில் ஒரே நோக்கம் தான் உள்ளது. ஒன்று, வரிசெலுத்தும் முறை மக்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும். ஜிஎஸ்டி எளிமையாக இருந்ததா? சிறு,குறு என அனைத்து தொழிலையும் காலி செய்துவிட்டதே?

நிதியமைச்சர் கேட்ட நியாயமான கேள்வி:

நிதியமைச்சர் கேட்ட நியாயமான கேள்வி:

மாதத்திற்கு ஒருமுறை ரிட்டர்ன்ஸ் ஃபைல் செய்ய வேண்டும் என்றார்கள். ஒரு லேத் தொழில் செய்பவர் எப்படி மாதாமாதம் ஒரு ஆடிட்டரை வைத்து ஃபைல் செய்ய முடியும்? அதாவது நான் வரி செலுத்தத் தயாராக இருக்கிறேன்.

ஆனால் அதைச் செலுத்தும் முறை எளிமையாக இருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லையே? ஆயிரத்து எட்டு படிவங்களை நிரப்பச் சொல்கிறார்களே. இரண்டாவது, ஒரு சீர்திருத்தம் என்றால் அரசுக்கு வருவாயை ஈட்டித்தர வேண்டும். அதுவும் இல்லை. 14% கீழாகத்தான் செல்கிறது. இன்னும் நிலைமை சீரடையவில்லை.

வரி குறைவாக இருக்கும் என்கிறார்கள். 28% மேல் போய்விட்டது. மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை ஒன்றிய அரசு சொந்த நிதியிலிருந்து பிரித்து வழங்கவில்லை. அதற்கு cess, surcharge என ஏகப்பட்ட வரிகள் போட்டு, அதைப் பிரித்துத் தருகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார். National monetisation pipeline என ஒன்றிய அரசு சொல்கிறது. பொதுத்துறை சொத்துகளில் கொஞ்சப் பங்கைத் தனியாருக்கு விற்பார்கள். இப்ப கொஞ்சம் விற்பதில்லை. மொத்தமாகவே விற்றுவிடுகிறார்கள்.

அப்படி விற்கும்போது அந்த நிறுவனங்களுக்கான நிலத்தை மாநில அரசுதான் வழங்குகிறது. மொத்த பங்கை விற்கும் போது மாநில அரசின் நிலத்திற்கான இழப்பீட்டையும் தர வேண்டும் என்று நிதியமைச்சர் கேட்டார். அது நியாயம் தானே? இதை வேறு மாநில அரசுகள் யாருமே கேட்கவே இல்லை" என்கிறார் பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+